தி.மு.க.,வுக்கு 'வாய்ப்பூட்டு' * மதுரையில் மார்க்சிஸ்ட் எம்.பி., குறித்து விமர்சிக்க* தேர்தல் கூட்டணிக்காக பம்முகிறதா என விமர்சனம்

மதுரை: 'மதுரையில் மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் குறித்து தி.மு.க., வினர் யாரும் விமர்சிக்க கூடாது' என நகர் தி.மு.க., செயலாளர் தளபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் ஜனநாயகம் பேசும் தி.மு.க.,வுக்கு இப்படி ஒரு சோதனையா என நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் மதுரை மாநகராட்சி கடைசி இடம் பெற்றது தொடர்பாக மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன், மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணிகளின் செயல்பாடுகளை விமர்சித்து 'முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்' என ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு, ஜூலை 29ல் மேயர் இந்திராணி தலைமையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் தலைவர் ஜெயராம், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு மதுரைக்கு கடைசி இடம் ஒதுக்கி 'குப்பை மாநகராட்சி' என குறிப்பிட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு கடைசி இடம் என எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது. கீழடி ஆய்வை மத்திய அரசு ஏற்காதது போல் மாநகராட்சி தேர்வை நாங்களும் ஏற்க மாட்டோம். இந்த விஷயம் தெரியாமல் எம்.பி., வெங்கடேசனும் குப்பை மாநகராட்சி என்கிறார். தி.மு.க.,வினர் உழைப்பில்தான் அவர் 2 வது முறையாகவும் எம்.பி.,யாகி உள்ளார் என்ற ரீதியில் பேசினார்.

அவரது பேச்சுக்கு தி.மு.க., உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதானம் செய்த மேயர், கூட்டணிக்குள் மோதல் வேண்டாம். எம்.பி.,யின் விமர்சனம் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

யாரும் பேசக் கூடாது இந்நிலையில், ஆறு நாட்களுக்கு பின் நகர் தி.மு.க., செயலாளர் தளபதி நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை மாநகராட்சியில் குப்பை, பாதாளச் சாக்கடை பற்றிய குறைகளை, மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில், வெங்கடேசன் எம்.பி., குறைகளை சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டணி கட்சியாக இருந்தாலும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை அக்கட்சியினருக்கு உள்ளது. அவர்கள் வேண்டுகோளை ஏற்று அரசும் சரிசெய்து வருகிறது. இந்நிலையில் மாநாராட்சி கூட்டத்தில் வெங்கடேசன் குறித்து ஜெயராம் பேசியது தேவையற்றது. இனிமேல் யாராக இருந்தாலும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: தி.மு.க., மாநகராட்சியை மார்க்சிஸ்ட் எம்.பி., விமர்சித்த நிலையில் அவருக்கு தி.மு.க., கவுன்சிலர்கள் பதில் அளித்தனர். பதிலுக்கு அக்கட்சியினரும் வாக்குவாதம் செய்து, '37 தொகுதிகளில் தி.மு.க.,வை ஜெயிக்க வைத்தது மார்க்சிஸ்ட் உட்பட கூட்டணிகள்தான். 2026 தேர்தலிலும் கூட்டணி ஆதரவு இருந்தால்தான் நீங்களும் (தி.மு.க.,) ஆட்சி அமைக்க முடியும்' என்று மிரட்டல் விடுப்பது போன்று அவர்களும் பேசினர்.

தேர்தலில் தி.மு.க.,வின் தயவு தான் மார்க்சிஸ்ட்டுக்கு தேவை என்பதை மறந்துவிடக் கூடாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோல் தி.மு.க.,வினருக்கு 'வாய்ப்பூட்டு' போடும் வகையில் உத்தரவிட்டால் அது கட்சிக்குத்தான் பலவீனம். தி.மு.க., பம்முகிறது என்ற விமர்சனம் எழும். தேர்தல் பணிகளில் நிர்வாகிகள், தொண்டர்களின் ஆர்வம் குறையும் என்பதை தலைமை உணர வேண்டும் என்றனர்.

Advertisement