இன்று முதல் 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'ரெட் அலெர்ட்'

பெங்களூரு: கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலெர்ட்' விடுத்துள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை குறைந்திருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியூட்டுகிறது. பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரம் பெய்த மழையில், கே.ஆர்.,புரம், மஹாதேவபுரா, சாலைகளில் மழைநீர் தேங்கியது. இரவில் பல பகுதிகளில் கன மழை பெய்தது.

தேங்கிய நீர் ராமமூர்த்தி நகர், சிவாஜி நகர், ஆர்.டி., நகர், ஜே.சி., நகர், ஜக்கூரு, எச்.கொள்ளஹள்ளி, கொடிகேஹள்ளி, எலஹங்கா, புலிகேசி நகர், சம்பங்கிராம் நகர், ஹொரமாவு, காட்டன்பேட், காடுகோடி, பொம்மனஹள்ளி, பி.டி.எம்., லே - அவுட், ராஜாஜி நகர், ராஜராஜேஸ்வரி நகர், ஹூடி, சங்கசந்திரா, நாயண்டஹள்ளி, பீன்யா தொழிற் பகுதி உட்பட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.

இரவு 10:00 மணிக்கு மேல் மழை பெய்ததால், பணி முடித்து வீட்டுக்கு செல்பவர்கள் தப்பினர். அதேவேளையில், இரவு நேர ஷிப்டில் பணிக்கு சென்றவர்கள் மழையில் சிக்கிக் கொண்டனர்.

வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, பஸ் நிறுத்த நிழற்கூடத்தின் கீழும், மெட்ரோ ரயில் பாலத்தின் கீழும், ரயில்வே சுரங்கப்பாதையின் கீழும் தஞ்சம் புகுந்தனர்.

சாலையில் தேங்கிய மழைநீரால், வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றனர். சிலரின் வாகனங்களின் சைலன்சர்களில் மழைநீர் புகுந்ததால், தள்ளிச் சென்றதையும் காண முடிந்தது.

அதுபோன்று நேற்றிரவு இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் நகரின் சிவாஜி நகர், கன்டோன்மென்ட், தொம்மலுார், ஹலசூரு, வசந்த் நகர், பெல்லந்துார், சி.வி.ராமன் நகர், ஹூடி, கே.ஆர்.,புரம், எச்.பி.ஆர்., லே - அவுட், ஹொரமாவு, கல்யாண் நகர், ஜாலஹள்ளி, பீன்யா, ஆர்.டி.நகர், வித்யாரண்யபுரா, எலஹங்கா, யஷ்வந்த்பூர், பொம்மனஹள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி, மடிவாளா, பனசங்கரி, பானஸ்வாடி, கெங்கேரி, நாகரபாவி, நந்தினி லே - அவுட் உட்பட பல இடங்களில் போக்குவரத்து பாதித்தது.

அறிக்கை இதற்கிடையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:

தமிழகத்தை ஒட்டி வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதால், கர்நாடகாவில் இன்று முதல் 7ம் தேதி வரை கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா மற்றும் பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, கோலார், ஷிவமொக்கா, துமகூரு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கடலோர மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை, 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.

அதுபோன்று, விஜயநகரா, ராம்நகர், மைசூரு, மாண்டியா, தாவணகெரே, சாம்ராஜ்நகர், பெங்களூரு நகரம், யாத்கிர், ராய்ச்சூர், கொப்பால், கலபுரகி, ஹாவேரி, கதக், தார்வாட், பெலகாவி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் இன்று முதல் 8ம் தேதி வரை அதிகபட்சமாக 28 டிகிரியும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement