அரசின் திட்டங்களில் தனிநபர் பெயர் இடம் பெறுவதை ஏற்க முடியாது: தே.மு.தி.க., பிரேமலதா உறுதி

ஆவடி: 'மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு, தனிநபரின் பெயர் வைப்பதை ஏற்க முடியாது' என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.



சென்னை அருகே ஆவடியை அடுத்த பட்டாபிராம், தண்டுரை பகுதியில், தே.மு.தி.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு பின் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், கடைக்கோடியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து, பூத் கமிட்டி அமைத்து, கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஜன., 9ல், கடலுாரில் நடைபெறும் மாநாட்டுக்கு முன், யாருடன் கூட்டணி என முடிவு செய்யப்படும். மாநாட்டில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதற்குள் ஆணவ படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அவர், முதலில் களத்திற்கு வந்து மக்களை சந்திக்கட்டும். அதன்பிறகு, அடுத்தடுத்து அவரின் செயல்பாடுகள் பார்த்தே, கருத்து கூற முடியும்.


அரசின் ஒவ்வொரு திட்டமும், மக்களின் வரிப்பணத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்கள் பொதுவான பெயரில் இருந்தால் வரவேற்கலாம். ஆனால், தனி நபரின் பெயரில் திட்டம் வருவதை ஏற்க முடியாது; அது கண்டிக்கத்தக்கது. தே.மு.தி.க., இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும்.


சினிமாவில் நடிக்கும் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு வாழ்த்துகள். வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை அளிக்கக் கூடாது; அவரவர் பிறந்த இடத்தில் தான் ஓட்டுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement