தர்மஸ்தலா மரணங்கள்; 11வது இடத்திலும் மனித எலும்பு கூடுகள் தோண்டியெடுப்பு

மங்களூரு: தர்மஸ்தலாவில், 11வது இடத்தில் தோண்டியபோது மனித எலும்புக் கூடுகள் சிக்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், கொலை செய்யப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக மஞ்சுநாதா கோயிலின் முன்னாள் ஊழியர் புகார் தெரிவித்தார். சிறப்பு புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம், 13 இடங்களையும் அவர் அடையாளம் காட்டினார்.

ஜூலை 29ம் தேதி முதல் இந்த இடங்களை தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. ஆறாவது இடத்தில் மட்டும் 12 எலும்புக் கூடுகள், ஒரு மண்டை ஓடு கிடைத்தது. ஏழு முதல் 10வது இடங்களில் தோண்டியதில், எதுவும் கிடைக்கவில்லை. 11வது இடத்திலும் நேற்று தோண்டப்பட்டது.

பணி துவங்கிய சிறிது நேரத்தில், அந்த இடத்திற்கு பதிலாக, நேத்ராவதி ஆற்றின் குளிக்கும் பகுதிக்கு அருகில் தோண்டலாம் என, அவர் கூறினார். இதன்படி, அங்கு தோண்டினர். அப்போது சில எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. இன்றும் தோண்டும் பணி தொடர்கிறது. ஒரு நாள் தோண்டும் செலவுக்கு 1.50 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.

Advertisement