பிரதமரின் உதவித்தொகை 38,576 விவசாயிகளுக்கு மறுப்பு

சென்னை: உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், தமிழகத்தைச் சேர்ந்த 38,576 விவசாயிகளுக்கு, பிரதமரின் விவசாய உதவித்தொகை மறுக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி செலவிற்கு உதவும் வகையில், மத்திய அரசு வாயிலாக ஆண்டுதோறும் 6,000 ரூபாய் பிரதமரின் விவசாய உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக, 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

கடந்த 2ம் தேதி, 9.70 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில், 20,500 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. திட்டம் துவங்கியது முதல் இதுவரை, 20 தவணைகள் விடுவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த, 22 லட்சத்து 24,724 விவசாயிகளுக்கு, 20வது தவணை உதவித்தொகை கிடைத்துள்ளது.

இதற்காக, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மொத்தமாக, 463 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, 22 லட்சத்து 63,300 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

ஆதார், பட்டா, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், 38,576 விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. உதவித்தொகை பெற, வேளாண் துறை உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே, விவசாய உதவித்தொகை விடுவிப்பு தொடர்பாக, விவசாயிகளுக்கு தமிழில் பிரதமர் மோடி, எஸ்.எம்.எஸ்., எனப்படும், குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.


அதில், 'பிரதமரின் கிஸான் சமான் நிதி திட்டத்தின், 20வது தவணையாக 2,000 ரூபாய், தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. அதில், 'பிரதமரின் கிஸான் சமான் நிதி திட்டத்தின், 20வது தவணையாக 2,000 ரூபாய், தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
உங்கள் விவசாய தேவைகளுக்கு, இது உதவும் என நம்புகிறேன். உங்கள் நரேந்திர மோடி' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement