மீண்டும் மீண்டும் முளைக்கும் ஆபாச வீடியோக்கள்: சென்னை உயர்நீதிமன்றம் கவலை

3


சென்னை: '' ராவணன் தலை போல் ஆபாச வீடியோக்கள் மீண்டும் மீண்டும் முளைத்து வருகிறது,'' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சென்னை ஐகோர்ட்டில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ' கல்லூரி படித்த போது, ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதி அளித்ததை நம்பி அவருடன் நெருக்கமாக இருந்தேன். அந்த நேரத்தில் நெருக்கமாக இருந்ததை , காதலன் தன் மொபைல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவும், புகைப்படங்களும், இணையதளங்கள், ஆபாச வலைதளங்கள், சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளன.


இதுகுறித்து, என் நண்பர் சொன்ன பின்னர் தான், நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து, அவற்றை இணையதளங்களில் காதலன் பதிவேற்றியது தெரியவந்தது. எனவே, சமூக வலைதளங்கள், இணையதளங்கள், ஆபாச வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோக்களை முடக்கவும் நீக்கவும், எதிர்காலத்தில் அது பரவாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி, ஜூன் 18ல் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தமிழக டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன். அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.


இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை, இணையதளத்தில் இருந்து, 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தார்.


இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது பெண் வழக்கறிஞர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ' ஆபாச வீடியோக்கள் மேலும் 13 இணையதளங்களில் பரவி உள்ளது,' எனத் தெரிவித்து இருந்தார்.


இதனையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், ராவணனின் தலை வெட்டப்பட்ட பிறகு மீண்டும் மீண்டும் முளைப்பது போல் வெளியாகும் பெண் வழக்கறிஞரின் ஆபாச வீடியோக்கள் வெளியாகின்றன. ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்பரேஷன் சிந்தூரின் போது சட்டவிரோத இணையதளங்களை முடககியது போல் இதிலும் செய்ய வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Advertisement