ஆன்லைன் கேமிங்: இந்திய பயனர் விவரங்கள் இணையத்தில் கசிவு

புதுடில்லி: இந்தியாவில் ஆன்லைன் கேமிங் கணக்கு வைத்துள்ள 84,000க்கும் மேற்பட்ட பயனர் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக, உலகளாவிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை இன்று தெரிவித்துள்ளது.
ஆன்லைன் கேமிங் என்பது இணையம் வழியாக விளையாடப்படும் விளையாட்டுகளைக் குறிக்கிறது. இது ஒரு கணினி அல்லது மொபைல் சாதனத்தில் விளையாடப்படும் ஒரு வகை கேம். ஆன்லைன் கேம்களில், பயனர்கள் தனித்தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் இணைந்தோ விளையாடலாம்.
சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்தோர் பலர், இதில் பயனர் கணக்கு தொடங்கி விளையாடி வருகின்றனர். இந்நிலையில் 2024ம் ஆண்டில் இந்தியாவில் 84,000க்கும் மேற்பட்ட ஆன்லைன் கேமிங் கணக்கு பயனர் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளதாவது:
கேமிங் கணக்கு பயனர் விவரங்களின் அதிகபட்ச எண்ணிக்கையிலான கசிவுகள் தாய்லாந்தில் தான் ஏற்பட்டுள்ளன, குறைந்தபட்சமாக இதுபோன்ற நிகழ்வுகள் சிங்கப்பூரில் இருந்தன.
கடந்த ஆண்டு 1கோடியே 10 லட்சம் கேமிங் கணக்கு சான்றுகள் கசிந்தன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இது அதிகமாக நடக்கிறது. இதன் மூலம் டேட்டா திருட்டு நடக்கும்; பயனர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு காஸ்பர்ஸ்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.