இந்தியாவுக்கு மூன்று புதிய கார்கள்: நிஸான்

இந்தியாவுக்கு மூன்று புதிய கார்கள்: நிஸான் 'பேட்ரோல்' வடிவிலான எஸ்.யூ.வி., தயார்

சவுரப் வட்சா நி ஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்

1 ரெனோ நிஸான் ஆலையின் பங்குகளை, ரெனோ நிறுவனத்திற்கு விற்பனை செய்து, உற்பத்தி ஒப்பந்தத்திற்கு மாறியது ஏன்?





நிஸான் நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இதனால், எங்களின் முக்கிய சந்தையான இந்தியாவில் இருந்து பின்வாங்குவதாக அர்த்தம் இல்லை. உற்பத்தி ஒப்பந்தத்தின் வாயிலாக, நிஸான் கார்களை உற்பத்தி செய்ய, இந்த ஆலையில் குறிப்பிடத்தக்க உற்பத்தி திறனை பெற்றுள்ளோம். இது, சந்தை தேவைகளுக்கு ஏற்ப வேகமாக செயல்பட்டு, எங்களின் செலவுகளை குறைக்கவும், இதர தடங்களை தடுக்கவும் உதவுகிறது.

2 இந்தியாவில் ரூ.7,101 கோடி முதலீடு செய்வதாக நிஸான் நிறுவனம் அறிவித்தது. என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?





அடுத்த, 12 முதல் 18 மாதங்களில், மூன்று புதிய கார்களை இங்கு அறிமுகப்படுத்தி, 35 - 40 விற்பனை மையங்களை அதிகரிக்க உள்ளோம். நடப்பு நிதியாண்டிற்குள், கார் விற்பனையை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த முதலீட்டின் முதல் ரூ. 1,000 கோடி, மேக்னைட் காரில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

3 இந்திய கார் சந்தையில், வரவுள்ள புதிய நிஸான் கார்கள் என்ன?





சி - எஸ்.யூ.வி., பிரிவில் இரு கார்களையும், பி - எம்.பி.வி., பிரிவில் ஒரு காரையும் அறிமுகம் செய்ய உள்ளோம். குறிப்பாக, நிஸானின் பிரபலமான பேட்ரோல் எஸ்.யூ.வி., காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 5 - சீட்டர் எஸ்.யூ.வி., கார் வர உள்ளது. கூடுதலாக, மின்சார எஸ்.யூ.வி. காரை உருவாக்கி வருகிறோம். தக்க நேரம் வரும் போது அறிமுகம் செய்வோம். அடிப்படை விலை மின்சார காரை உருவாக்க, ஆய்வுகள் நடந்து வருகின்றன.

4 நிஸான் கார்களின் உள்நாட்டு விற்பனையை விட, ஏற்றுமதி அதிகம் உள்ளதே, என்ன காரணம்?





கடந்த நிதியாண்டில், 99,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில், 71,000 கார்கள், 65க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதியானது. நடப்பு நிதியாண்டிற்குள், உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி ஆகிய இரு பிரிவுகளுக்கும் சமமாக, தலா ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். தற்போது, இந்திய அணிவகுப்பில் உள்ள இரு கார்களை, ஐந்தாக அதிகரிப்பதன் வாயிலாக, இந்த இலக்கை எட்ட முடியும்.

5 விற்பனையாகாத எக்ஸ் - ட்ரைல் கார்கள், சலுகை விலையில் பழைய கார் முகவர்களுக்கு விற்கப்பட்டுள்ளதே ஏன்?





தனியார் நிறுவனங்களுக்கு, மொத்த விற்பனை செய்வது வழக்கமான ஒன்று. ஆனால், இது தொடர்பான விபரங்களை வெளியிட விரும்பவில்லை. உலகின் தலை சிறந்த நிஸான் தொழில்நுட்பங்களை, வாடிக்கையாளர்கள் அனுபவிக்க, இந்த கார் அறிமுகமானது. இறக்குமதி முறை வணிகத்தை தொடர, மேலும் சில கார்களை கொண்டுவர ஆய்வு செய்து வருகி றோம்.

Advertisement