காஞ்சி நெசவாளர் தேசிய விருதுக்கு தேர்வு

காஞ்சிபுரம் : மத்திய அரசின், ஜவுளித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருதுக்கு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் ஆக., 7ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று, நாடு முழுதும் தேர்வு செய்யப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு விருதும், நலத்திட்ட உதவிகளும் வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.
மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில், நாடு முழுதும் பல்வேறு வகையான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நெசவாளர்கள், டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு, காஞ்சிபுரத்திலிருந்து ராஜசேகர், 41, என்ற நெசவாளர், மத்திய அரசின் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். டில்லியில் நாளை நடைபெறும் விழாவில், ஜவுளித்துறை சார்பில், இவருக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினரான இவர், காஞ்சிபுரத்தின் பாரம்பரிய ரகமான கோர்வை ரக பட்டு சேலையை நெய்துள்ளார்.
இவரது பட்டு சேலையை, மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தின் அதிகாரிகள், விருதுக்கு பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை ஏற்று, ராஜசேகர் நெய்த பட்டு சேலை விருதுக்கு தேர்வாகி உள்ளது.
புடவையின் கரையில், அடர் நீல நிறத்திலும், மையப்பகுதி நீல நிறத்திலும் நெய்யப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் கரை கொண்ட கோர்வை ரகமாகவும், முந்தானையில் பறக்கும் குதிரை, இரு தலை அன்னம் போன்ற டிசைன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், இந்த சேலையில் பல்வேறு வடிவங்கள் கைகளாலேயே பட்டு இழைகளை கோர்த்து நெய்யப்பட்டுள்ளது.
@quote@ இந்த விருது மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 20 நாட்களாக இந்த சேலையை நெய்தேன். காமாட்சியம்மன் பட்டு கைத்தறி சங்க ஊழியர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் ஆகியோர் ஒத்துழைப்பு கொடுத்தனர். -ஜி.ராஜசேகர், நெசவாளர், காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கம், காஞ்சிபுரம்quote