திடக்கழிவு மேலாண்மையில் முறைகேடு? விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு
திருப்பூர்; 'திடக்கழிவு மேலாண் மை திட்டம் என்ற பெயரில் முறைகேடு தான் நடக்கிறது. தனியார்மய டெண்டர் விதிமுறையில், தினமும் ஒவ்வொரு வார்டுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய துாய்மைப் பணியாளர் முழு அளவில் ஒதுக்கப்படுவதில்லை,' என, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழகத்தில் மாநிலத்தில், பல இடங்களில் குப்பை அகற்றும் பிரச்னை என்பது, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மைப்பணி, தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. பணியை டெண்டர் எடுத்த 'கான்ட்ராக்ட்' நிறுவனத்தினர், துாய்மைப் பணியாளர் வாயிலாக, வீடுவீடாக குப்பை சேகரித்து, மொத்தமாக குப்பைக் குழியில் கொட்டி விடுகின்றனர்.
அக்குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுவதில்லை. திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளில், குப்பைக் கொட்டுவதற்கே இடமில்லை என்ற நிலையில், பாறைக்குழி உள்ளிட்ட திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு, சுகாதாரக்கேடு ஏற்படவும், நிலத்தடி நீர் மாசுபடவும் காரணமாகி உள்ளன.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்டப்பிரிவு அணி, மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
சென்னை ஐ.ஐ.டி., குப்பை மேலாண்மை பணியில், 'ஸ்டார்ட் அப்'களை ஊக்குவிக்க, மாநில அரசின் சிறப்பு செயலாக்கத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தும் செய்துள்ளது. ஆனால், திருப்பூர் மாநகராட்சி உட்பட நகராட்சி, மாநகராட்சிகளில் துாய்மைப்பணியை 'கான்ட்ராக்ட்' எடுத்துள்ள தனியார் நிறுவனத்தினர், குப்பையை தரம் பிரித்து, மேலாண்மை செய்யாமல் மொத்தமாக குப்பைக்குழியில் கொட்டி விடுகின்றனர்.திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் முறைகேடு தான் நடக்கிறது.
தனியார்மய டெண்டர் விதிமுறையில், தினமும் ஒவ்வொரு வார்டுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய துாய்மைப் பணியாளர் முழு அளவில் ஒதுக்கப்படுவதில்லை. அவர்கள் பணிக்கு வந்ததாக பொய்க்கணக்கு எழுதி, பெரும்தொகை முறைகேடு செய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல், குப்பை அள்ளும் வாகனங்கள் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் முறைகேடு நடக்கிறது.
திட்டத்தின் மிகப்பெரும் தோல்வியாக, சேகரிக்கப்படும் குப்பை, மேலாண்மை செய்யப்படாமல் எரியூட்டப்படுகிறது. குறிப்பிட்ட சில வார்டுகளில் குப்பை மேலாண்மை செய்ய தன்னார்வ அமைப்பினர் முன்வரும் நிலையில், அதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.
எனவே, திடக்கழிவு மேலாண்மையில் தனியார்மயம் என்பது,அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊழல் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டம். அரசின் சிறப்பு செயலாக்கத்துறை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் யதார்த்த கள நிலவரத்தை ஆராய்ந்து, மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.