வெற்றி நாயகன் வாஷிங்டன் * சச்சின் பாராட்டு

மும்பை: இங்கிலாந்து சென்ற இந்திய அணி, 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இத்தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியது:
இந்திய அணியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தனது பங்களிப்பை சிறப்பாக வழங்குகிறார் வாஷிங்டன் சுந்தர். இரண்டாவது டெஸ்ட் 5வது நாளில், இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்சை, உணவு இடைவேளைக்கு சற்று முன் போல்டாக்கினார். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக, வாஷிங்டனின் பந்து வீச்சு அமைந்தது.
அணிக்கு தேவை என்றால் களத்தில் நங்கூரம் போல நிலைத்து விளையாடுகிறார். நான்காவது டெஸ்டில் இதை சரியாகச் செய்தார். சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாக விளையாட வேண்டிய நேரத்தில், அசத்துகிறார். 5வது டெஸ்டில் 53 ரன்களை வேகமாக எடுத்தார். இதை ரசித்து பார்த்தேன். 'வெல்டன்', வாஷிங்டன்.
நான்காவது டெஸ்டில் ஜடேஜா, வாஷிங்டன் என இருவரும் நாள் முழுவதும் விளையாடி, போட்டியை 'டிரா' செய்ய கைகொடுத்தனர். இதனால் தான் தொடரில் விறுவிறுப்பு அதிகரித்தது. இவர்கள் சதம் அடிக்க அனுமதித்த முடிவு, என்னைப் பொறுத்தவரையில் சரியானது தான். இங்கிலாந்து பவுலர்களுக்கு நாம் ஏன் ஓய்வு தர வேண்டும். ஹாரி புரூக்கை பவுலிங் செய்ய அழைத்தது, ஸ்டோக்சின் விருப்பம். இந்தியாவின் பிரச்னை அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

பும்ரா இல்லாமல்...
இங்கிலாந்து தொடரில் 23 விக்கெட் வீழ்த்திய சிராஜ், இதுவரை 41 டெஸ்டில் 123 விக்கெட் கைப்பற்றியுள்ளார். பும்ரா 48ல் 219 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் கூறுகையில்,'' பும்ரா பங்கேற்ற 3 டெஸ்டில் இரு முறை 5 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் சாய்த்தார். இவர் விளையாடாத 2 டெஸ்டில், இந்தியா வென்றதாக பேசுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் இது தற்செயலான வெற்றி தான். ஏனெனில் பும்ரா வியத்தகு பவுலர். யாருடன் ஒப்பிட்டாலும், பும்ராவுக்குத் தான் முதலிடம் தருவேன்,'' என்றார்.

Advertisement