தொடர் மழையால் முருங்கை சாகுபடி அதிகரிப்பு
கரூர், தொடர் மழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால், முருங்கை விதைக்கு திடீரென விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
தமிழக அளவில், நெட்டு முருங்கை ரகம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, சேந்தமங்கலம் கீழ்பாகம், சேந்தமங்கலம் மேல்பாகம், நாகம்பள்ளி, இனங்கனுார், மொடக்கூர் மேல்பாகம், மொடக்கூர் கீழ்பாகம், கோவிலுார், சாந்தப்பாடி, தெத்துப்பட்டி, புங்கம்பாடி கீழ்பாகம், புங்கம்பாடி மேல்பாகம், ஈசநத்தம் உள்பட, 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில், 250க்கும் மேற்பட்ட கிராமங்களில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது.
முருங்கைக்கு கடும் கிராக்கி
அரவக்குறிச்சி பகுதியில் சாகுபடி செய்யப்படும் செடி முருங்கை, விதை முருங்கை மற்றும் ஒட்டு ரக முருங்கை ஆகியவற்றின் காய்கள் நீளமாக, திரட்சியுடன் ருசியாக இருக்கும். இதனால், இந்த பகுதிகளில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த பருவமழை காரணமாக, மானாவாரி நிலங்களில் முருங்கை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முருங்கை விதைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், விலையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
சீசன் காலங்களில் மானாவாரி நிலங்களில் முருங்கை உற்பத்தி அதிகரித்து காணப்படும். அப்போது, முருங்கைக்கு அதிகளவில் விலை கிடைக்காததால், காயை விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டு விடுவர். அந்த காய்கள் நன்கு காய்ந்து, விதைகளாக மாற்றம் செய்யப்பட்டு ஒரு கிலோவுக்கு, 500 ரூபாய் வரை கிடைத்தது. இந்நிலையில், தற்போது பெய்துள்ள தென்மேற்கு பருவ மழை காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், முருங்கை சாகுபடி அரவக்குறிச்சி வட்டாரத்தில் மீண்டும் துவங்கியுள்ளது. இதனால், விதைக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிற விதைகள் கடந்த வாரம் ஒரு கிலோ, 700 ரூபாய் வரை விலை போனது.
கூடுதல் விலைக்கு வாய்ப்பு
பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிக பனி பொழிவு காரணமாக முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்து விடும், இதனால், சாகுபடி குறைவால், தை மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் நடக்கும் போது, முருங்கைக்கு அதிக விலை கிடைக்கும். தற்போது, விதைக்கும் அதிக விலை கிடைக்கும் நிலையில், அடுத்த ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சுப முகூர்த்தம் காரணமாக, முருங்கைக்கும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்
-
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து
-
பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு
-
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
-
விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
-
உத்தராகண்ட் வெள்ளத்தில் 70 பேர் மீட்பு; 50 பேர் மாயம்: ராணுவம்