போலி நகைகளுக்கு ரூ.2.38 கோடி கடன் வங்கி ஊழியர் கைது; மேலாளருக்கு வலை

சென்னை,வங்கியில் போலி தங்க நகைகள் அடமானம் வைத்து, 2.38 கோடி ரூபாய் கடன் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் உட்பட இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மேலாளரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கனரா வங்கி மின்ட் கிளையின் துணை மேலாளர் விஜயசங்கர், 45. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில், வங்கியின் நடைமுறைப்படி உள்தணிக்கை செய்தபோது, வங்கியில் போலியான தங்க நகைகளுக்கு, வங்கி மேலாளர் மல்லுகுண்டா என்பவர், கடன் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

வங்கியில் உள்தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஏப்., 1ம் மாலை வங்கியை விட்டு வெளியேறிவிட்டார்.

பின் வங்கயின் நகை மதிப்பீட்டாளரான சரவணனிடம் விசாரித்ததில், வங்கி மேலாளர் அவருக்கு நன்கு பழக்கமான, 21 வாடிக்கையாளர்களை வங்கிக்கு வரவழைத்து, தங்க நகை கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

எனவே, போலி நகைகளை வங்கியில் வைத்து, வங்கிக்கு 2.38 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரில் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, மோசடியில் ஈடுபட்ட வங்கி நகை மதிப்பீட்டாளரான சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், 42, நகைக்கடன் பெற்ற ஆலந்துாரைச் சேர்ந்த ஜானகிராமன், 39, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement