கன்னியக்கோவிலில் இன்று தீமிதி விழா புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்

பாகூர: கன்னியக்கோவில் தீ மிதி திருவிழாவையொட்டி, இன்று புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நித்யா ராமக்கிருஷ்ணன் செய்திக்குறிப்பு;

பாகூர் அடுத்த கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில், தீமிதி திருவிழா இன்று (8ம் தேதி) மாலை 5:00 மணியளவில் நடக்கிறது. இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில் இலகு ரக மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து இன்று மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மாற்றம் செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் இருந்து கடலுார் செல்லும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள், தவளக்குப்பம் சந்திப்பில் வலது புறம் திரும்பி அபிஷேகப்பாக்கம் வழியாக கடலுார் - விழுப்புரம் புறவழிச்சாலையை அடைந்து கடலுார் செல்ல வேண்டும்.

அதேபோல், கடலுாரில் இருந்து புதுச்சேரி வரும் வாகனங்கள், முள்ளோடை சந்திப்பில் இடது புறம் திரும்பி பரிக்கல்பட்டு வழியே கடலுார் - விழுப்புரம் புறவழிச்சாலையை அடைந்து அபிஷேகப்பாக்கம் வழியாக தவளக்குப்பம் சந்திப்பிலிருந்து வர வேண்டும்.

மேலும், கடலுார் - புதுச்சேரி சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் முள்ளோடையிலிருந்தும் தவளக்குப்பத்திலிருந்தும் கடலுாருக்கும், புதுச்சேரிக்கும் செல்ல அனுமதிக்கப்படும்.

திருவிழாவை முன்னிட்டு சாலை நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் இந்த தற்காலிக மாற்று வழி ஏற்பாட்டிலுள்ள சிரமத்தை பொறுத்துக் கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement