துாய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்த முதல்வர்: அன்புமணி கண்டனம்

சென்னை, ஆக. 8---

''பணி நிரந்தரம் செய்யாமல், துாய்மை பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் துரோகம் செய்கிறார்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை மாநகராட்சியில், குப்பை அள்ளும் பணி, தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் துாய்மைப் பணியாளர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பை அகற்றப்படவில்லை. இதனால், தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

பிரச்னையின் தீவிரத்தை உணராத சென்னை மாநகராட்சி, 2,300 கோடி ரூபாயிலான இந்த ஒப்பந்தத்தால், தாங்கள் எந்த வகையில் பயனடையலாம் என, கணக்குப் போடுவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய துாய்மை பணியாளர்களின் உழைப்பையும், தியாகத்தையும் மதிக்காமல், பணியில் இருந்து நீக்குவது மனிதநேயமற்ற செயல்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தற்காலிக துாய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், சொன்னதை செய்யாமல், தி.மு.க., துரோகம் செய்ததால் துாய்மைப் பணியாளர்கள் வேலை இழந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். பட்டியலினத்தவர் மீதும், துாய்மைப் பணியாளர் மீதும், முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மையான அக்கறை இருந்தால், அவர்களை பணி நீக்கம் செய்யும் ஆணையை ரத்து செய்து, நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement