ஆய்வக உதவியாளர்களுக்கு ஆசிரியர் பயிற்சி: பட்டதாரி கணினி ஆசிரியர்களுக்கு 'பை பை'


தமிழக அரசு பள்ளிகளில், கணினி பற்றிய கல்வி வழங்க, ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதால், கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் நிலைமை உருவாகியுள்ளது.

பள்ளி மாணவர்களிடம் கணினி அறிவியல் பற்றிய புரிதலை உண்டாக்கும் வகையில், ஆய்வகங்கள் அமைப்பது, பாடப்புத்தகங்களை வடிவமைப்பது, ஆசிரியர்களை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக, அதற்கான செலவில் 40 சதவீதத்தை, மத்திய அரசு வழங்குகிறது.

இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடம் நடத்துவது மற்றும் கணினி சார்ந்த செயல்முறை விளக்கங்களை அளிப்பதற்கான, 'ஐ.சி.டி., இன்ஸ்ட்ரக்டர்' பணியிடங்களை நிரப்பாமல், ஏற்கனவே பணியில் உள்ள ஆய்வக உதவியாளர்கள் மற்றும், 'கெல்ட்ரான்' எனும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

இதனால், கணினி அறிவியல் பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் குமரேசன் கூறியதாவது:

கேரளாவை பார்த்து, 'பெல், பெஞ்ச்' என, தமிழக பள்ளிக்கல்வி துறை, ஒவ்வொரு விஷயமாக பின்பற்றுகிறது. ஆனால், 2014 முதல், அங்கு கணினி அறிவியலுக்கு தனி பாடப்புத்தகத்தை வடி வமைத்து, அதற்கான ஆசிரியர்களை நியமித்து, மாதம், 15,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழக அரசு, அனைத்து வசதிகளையும் செய்வதாக மத்திய அரசை ஏமாற்றி, அதற்கான நிதியை கைமாற்றுகிறது. தமிழக பள்ளிகளின் கணினி ஆய்வகங்கள், வெறும் வினாடி - வினா நிகழ்ச்சிக்கு மட்டும் தான் பயன்படுகின்றன.

தற்போது, 'டி.என்.ஸ்பார்க்' திட்டத்தை செயல்படுத்த, ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்து, மத்திய அரசை தொடர்ந்து ஏமாற்றுவதுடன், அரசு பள்ளி மாணவர்களின் திறமையையும் மழுங்கடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement