ரோந்து பணிக்கு தனியாக செல்லாதீங்க:போலீசாருக்கு அதிகாரிகள் 'அட்வைஸ்'

சென்னை: 'பிரச்னைகள் நடக்கும் இடங்களுக்கு, போலீசார் தனியாக ரோந்து செல்லக்கூடாது' என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாரை, தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் சிக்கனுாத்து கிராமத்தில், சிறப்பு எஸ்.ஐ., படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின், மாநிலம் முழுதும் போலீஸ் ரோந்து பணிகளை சீரமைக்கும் நடவடிக்கையில், கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் மண்டல ஐ.ஜி.,க்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, 1,321 சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய எல்லைகளில், அடிக்கடி குற்றங்கள் நடந்த இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதன் வாயிலாக, ரவுடிகள், கூலிப்படையினர், பழைய குற்றவாளிகள் வசிக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அடிக்கடி குற்றங்கள் நடந்த இடங்களில், போலீஸ் ரோந்து எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளோம்.
மாவட்டம் மற்றும் மாநகரங்களில், 24 மணி நேரமும் பொது மக்களின் பார்வையில் தெரியும்படி, போலீஸ் ரோந்து பணிகளில் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ரோந்து போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், வங்கிகள், பூட்டி கிடக்கும் வீடுகள், முக்கிய பிரமுகர்கள், தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடுகள் முன் படம் எடுத்து, உயர் அதிகரிகளுக்கு அனுப்ப வேண்டும்
முக்கியமான சந்திப்புகளில் ஒளிரும் விளக்குடன், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்
போலீஸ் ரோந்து பணிகளை, இணை, துணை, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
ரோந்து பணியில் குளறுபடிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இரவு நேரங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், குற்றங்களே நடக்கவில்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில், ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்
உளவு போலீசாரின் தகவல்களை அலட்சியம் செய்யக்கூடாது
எக்காரணத்தை முன்னிட்டும், பிரச்னைக்குரிய இடங்களுக்கு தனியாக ரோந்து செல்லக்கூடாது. சைக்கிள் ரோந்துக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
திருச்சி ராம்ஜி நகர் போன்ற குற்றம் அதிகம் நடக்கும் இடங்களில், துப்பாக்கியுடன் போலீஸ் அதிகாரிகள் நடை ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும்
துப்பாக்கி மற்றும் லத்தி இன்றி ரோந்து பணிகளில் ஈடுபடக் கூடாது. இப்படி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.










மேலும்
-
பார்க்கிங் பிரச்னை; பிரபல ஹிந்தி நடிகையின் நெருங்கிய உறவினர் கொலை
-
இந்தியாவுடன் முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை; சொல்கிறது அமெரிக்கா
-
சாக்லேட் கனவை நனவாக்குமா இந்தியா?
-
டிரம்ப் தடாலடியை தாண்டி ஜெயிப்போம்; பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
-
இலவச கட்டாயக்கல்வி திட்டத்தில் சிக்கல்: குழந்தைகள், பெற்றோருக்கு நெருக்கடி
-
வீணாக கடலுக்கு பாயும் காவிரி நீர் கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம்