மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 50 சதவீதம் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு தகவல்

மதுரை: மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த தாக்கலான வழக்கில், 2026 ஜனவரியில் முதற்கட்ட திட்டப் பணி நிறைவடையும். தற்போது 50 சதவீத பணி முடிந்துள்ளது என மத்திய அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு, 2018 ஜூன், 20ல் ஒப்புதல் அளித்தது. கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கி டெண்டர் அறிவிப்பு வெளியிட, 2018ல் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2018 டிச., 6ல் விசாரணையின்போது மத்திய அரசு, 'கேபினட் ஒப்புதல் கிடைத்தபின் எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவங்கி, 45 மாதங்களில் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்' என அறிக்கை சமர்ப்பித்து வழக்கு முடிக்கப்பட்டது.
கட்டுமானப் பணியை விரைவுபடுத்த உத்தரவிட மற்றொரு வழக்கு தாக்கல் செய்தேன். 2021 ஆக., 17ல் நீதிபதிகள் அமர்வு, '36 மாதங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது' என உத்தரவிட்டது.
இதை நிறைவேற்றாததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தேன். 2023ல் விசாரணையின்போது, 'திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி, 1977.8 கோடி ரூபாயில் தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படும். இது, ஐந்து ஆண்டுகள், எட்டு மாதங்களில் நிறைவேற்றப்படும்.
இதற்காக, ஜப்பானின் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சியிடம் கடன் பெற, அந்நாட்டு அரசுடன், 2021 மார்ச், 26ல் ஒப்பந்தம் கையெழுத்தானது' என, மத்திய அரசு தரப்பு தெரிவித்தது.
தோப்பூரில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதர முன்னேற்றம் எதுவும் இல்லை. மத்திய அரசு தாமதமின்றி நிதி ஒதுக்க வேண்டும். கட்டுமானப் பணியை குறித்த காலவரம்பிற்குள் விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.
மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன்: முதற்கட்ட திட்டப்பணி, 2026 ஜன.,ல் நிறைவடையும். பின், பயன்பாட்டிற்காக எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். கட்டுமான பணி யில், தற்போது, 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், 'மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது' என உத்தரவிட்டனர்.



மேலும்
-
பார்க்கிங் பிரச்னை; பிரபல ஹிந்தி நடிகையின் நெருங்கிய உறவினர் கொலை
-
இந்தியாவுடன் முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை; சொல்கிறது அமெரிக்கா
-
சாக்லேட் கனவை நனவாக்குமா இந்தியா?
-
டிரம்ப் தடாலடியை தாண்டி ஜெயிப்போம்; பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
-
இலவச கட்டாயக்கல்வி திட்டத்தில் சிக்கல்: குழந்தைகள், பெற்றோருக்கு நெருக்கடி
-
வீணாக கடலுக்கு பாயும் காவிரி நீர் கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம்