விளையாடிய மாணவர் தலையில் பாய்ந்தது ஈட்டி

கம்பம்: தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி தனியார் மேல்நிலைப்பள்ளியில், ஈட்டி எறிதல் பயிற்சியின் போது, ஒன்பதாம் வகுப்பு மாணவரின் தலையில் ஈட்டி பாய்ந்தது.


ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி விடுதியில் தங்கி, கோம்பையை சேர்ந்த சந்திரன் மகன் சாய்பிரகாஷ், 13, என்பவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை, பள்ளி மைதானத்தில், சக மாணவர்களுடன் கால்பந்து விளையாடினார்.


மைதானத்தின் மற்றொரு பகுதியில், கூடலுார் சரவணன் மகன் தீதேஷ், 21, என்பவர், கல்லுாரி மாணவர்களை அழைத்து வந்து, ஈட்டி எறிதல் பயிற்சி அளித்தார்.




பயிற்சியின் போது, தீதேஷ் ஈட்டி எறிந்து காண்பித்த போது, தவறுதலாக மாணவர் சாய் பிரகாஷின் பின் தலையில் பாய்ந்தது.



பலத்த காயடைந்த மாணவரை அங்கிருந்தவர்கள், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement