கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்; தானம் செய்தவரின் சகோதரருக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம்!

8


சூரத்: கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண், தானம் செய்தவரின் சகோதரருக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பல்வேறு கவனத்தை ஈர்த்துள்ளது.


உத்தரபிரதேசத்தின் அலிகாரில் 16 வயது அனம்தா அஹ்மத் என்ற சிறுமி, 3 ஆண்டுகளுக்கு முன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது, மின்சார கம்மி அறுந்து கிடந்ததில், வலது கையை இழந்தார். வலது கை துண்டிக்கப்பட்ட அனம்தா அஹ்மத்,
கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.


இவருக்கு உறுப்பு தானம் செய்த ரியா என்ற பெண் கடந்த ஆண்டு இறந்தார். அவரது வலது கை, குடும்பத்தினரிடம் இருந்து தானம் பெறப்பட்டு அனம்தாவுக்கு பொருத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி ரியாவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கார்னியா மற்றும் இடது கை ஆகியவையும் தானமாக வழங்கப்பட்டு, எட்டு பேர் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.

கைமாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற சிறுமி அனம்தா, தனக்கு உதவிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க நேரில் சென்றார்.


இதற்கென மும்பையிலிருந்து குஜராத்தில் உள்ள வால்சாத் வரை பயணம் செய்த 16 வயது அனம்தா அஹ்மத், உறுப்பு தானம் செய்த ரியாவின் சகோதரர் சிவம் மிஸ்திரிக்கு ராக்கி கயிறு கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவருக்கு ராக்கி கட்ட தனது கையை நீட்டியபோது பதினான்கு வயது சிவம் மிஸ்திரியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.
அது அவரது சகோதரி ரியாவின் கை. கடந்த ஆண்டு மூளை ரத்தக்கசிவு காரணமாக ரியா இறக்கும் வரை அவர் பல முறை முத்தமிட்டு, தனது அன்பை வெளிப்படுத்திய தருணத்தை கண்ணீர் மல்க சிவம் மிஸ்திரி தெரிவித்தார்.


வல்சாத்தின் தித்தல் கடற்கரை சாலையில், ஒன்றிணைந்த இரண்டு குடும்பங்களும் ரக்ஷா பந்தனைக் கொண்டாடிய போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்பகுதியில் இருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.

அனம்தாவைத் தழுவி, கண்ணீர் மல்க ரியாவின் குடும்பத்தினர் கட்டி அணைத்தனர். அவர்களின் முகங்களில் கண்ணீர் வழிந்தது. "நான் அனம்தாவைச் சந்தித்து அவள் கையைப் பிடித்தபோது, என் ரியா மீண்டும் உயிர்பெற்றது போல் உணர்ந்தேன்," என்று ரியாவின் தாய் த்ரிஷ்ணா கூறினார்.

மேலும் அவர், அனம்தா இப்போது என் மகள், ரியா எப்போதும் அவளுக்குள் வாழ்வாள். நாங்கள் இன்னும் எங்கள் இழப்பைக் கடந்து வருகிறோம். ஆனால் அனம்தா எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார். நல்ல வாழ்க்கை வாழ்கிறார் என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. என் மகனின் மணிக்கட்டில் ராக்கி கட்ட இவ்வளவு தூரம் பயணம் செய்த இந்தப் பெண்ணுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

ராக்கி கயிறு கட்டிய பிறகு ரியாவின் சகோதரர், சிவம் மிஸ்திரி கூறியதாவது: அவளுடைய (அனம்தாவின்) கைகள் ரியாவின் கைகளைப் போலவே இருந்தன, உடலும் கூட. திடீரென்று நான் ரியாவைப் பார்த்தேன் என்று நினைத்தேன். இந்த முறை அனம்தா என்னைச் சந்திக்க மும்பையிலிருந்து வந்தாள், அடுத்த வருடம் அவளைப் பார்க்கப் போவேன். இந்த பாரம்பரியம் என் வாழ்நாள் முழுவதும் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement