பதிவுக்கு செல்லும் முன் பத்திரத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வீ டு, மனை வாங்கும்போது அதற்கான ஆவணங்கள் சரி பார்ப்பதில் கவனமாக இருந்தால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர். ஒரு வகையில் ஆவணங்களை துல்லியமாக சரிபார்த்தால் பெரும்பாலான பிரச்னைகளை தவிர்க்கலாம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

அதே நேரத்தில், சொத்து உரிமை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதுடன், பலரும் அமைதியாகிவிடுவதால் பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. குறிப்பாக, சொத்தின் உரிமையாளர் இவர் தான் என்பதும், அதில் வேறு எந்த வில்லங் கமும் இல்லை என்பதையும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்த வேண்டும்.

முந்தைய பத்திரங்கள் அனைத்தும் மிக சரியாக இருக்கிறது என்பதை ஆய்வு வாயிலாக உறுதி படுத்தினால் மட்டும் போதாது. உங்கள் பெயருக்கு பதிவு செய்ய வேண்டிய கிரைய பத்திரத்தில் என்னென்ன விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை எந்த அளவுக்கு சரியாக உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பெரும்பாலான இடங்களில் முந்தைய பத்திரங்களை துல்லியமாக பார்ப்பவர்கள் கூட புதிதாக தயாரிக்கப்படும் கிரைய பத்திர விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். புதிதாக தயாரிக்கப்படும் கிரைய பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்யும் முன், அதை முழுமையாக பதித்தால் சிறிய அளவிலான பிழைகளை தவிர்க்கலாம்.

பதிவுக்கான பத்திரத்தை தயார் செய்து கொடுப்பவர்கள் புரூப் பார்ப்பது என்ற அடிப்படையில் எழுத்து பிழைகளை மட்டுமே சரி பார்ப்பதால், சொத்து விபரம் தொடர்பான தவறுகள் தெரியவராமல் போய்விடுகிறது. இத்தகைய தவறுகளுடன் சில சமயங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

சில ஆண்டுகள் கழித்து அதன் அடிப்படையில் வங்கிக்கடன், கட்டட அனுமதி போன்ற விஷயங்களுக்கு செல்லும் போது தான் பிழைகள் தெரிய வருகின்றன. நீங்கள் வாங்கும் சொத்துக்கான சர்வே எண், அதன் தற்போதைய உட்பிரிவு, மனை எண், நான்கு பக்க அளவுகள், மொத்த பரப்பளவு ஆகிய விபரங்களை மிக துல்லியமாக சரி பார்க்க வேண்டும்.

இத்துடன் அந்த நிலத்துக்கான வகைபாடு என்ன என்பதை வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில் சரி பார்த்து தெளி வாக குறிப்பிட வேண்டும். சில இடங்களில் ஏற்கனவே நத்தம் நிலமாக இருந்த இடம் தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், அது முன்பு நத்தம் வகைப்பாட்டில் இருந்த விபரத்தை குறிப்பிடுவது அவசியம்.

இத்துடன், சொத்தின் பழைய பத்திரத்தில் அதன் உரிமையாளர் பெயர், முகவரி எப்படி குறிப்பிடப்பட்டுள்ளதோ, அப்படியே புதிய பத்திரத்திலும் குறிப்பிட வேண்டும். முகவரி விஷயத்திலும், அவரது ஆதார் எண், மொபைல் போன் எண், பான் எண் ஆகிய விபரங்களை குறிப்பிடும் போதும் மிக துல்லியமாக சரி பார்க்க வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

Advertisement