கட்டடத்தில் பராமரிப்பு செலவுகளை சமாளிப்பது எப்படி?

சொ ந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டினாலும் சரி, அல்லது அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கினாலும் சரி, அதில் முதலில் ஆகும் செலவை மட்டுமே பெரும்பாலான மக்கள் கவனத்தில் கொள்கின்றனர். பொதுவாக வீடு வாங்குவதில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து பத்திரங்களை பதிவு செய்வதுடன் அனைத்தும் முடிந்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர்.

ஆனால், நீங்கள் வாங்கிய வீடு கான்கிரீட், செங்கல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இதில் இயற்கை கால நிலை மாற்றங்கள், இயல்பான பயன்பாடு போன்ற காரணங்களால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மக்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.

அதிக மழை, அதிக வெயில் போன்ற கால நிலை மாற்றங்களால் கட்டடத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, கான்கிரீட் கட்டடங்களில் தண்ணீர் வினியோகம், கழிவு நீர் வடிகால் வசதிகளில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் கூட கட்டடத்தின் உறுதியை பாதிக்கும்.

இது மட்டுமல்லாது, மழைக்காலத்தில் கட்டடத்தின் மீது தேங்கும் தண்ணீர் முறையாக, உடனுக்குடன் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. மொட்டை மாடியில் மட்டுமல்லாது, கட்டடத்தின் சுற்றுப்புற பகுதியிலும், ஒரு நாளைக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றால் அது மெல்ல நிலத்தில் இறங்கி கட்டடத்தின் உறுதியை பாதிக்க வாய்ப்புள்ளது.

மேலும், அடுக்குமாடி கட்டடங் களில் கன்சீல்டு முறையில் அமைக்கப்படும் தண்ணீர் விநியோக குழாய்களில் தரம் குறைந்தால், பழுது ஏற்பட்டால் அதில் ஏற்படும் நீர்க்கசிவு கட்டடத்தில் சேதத்தை ஏற்படுத்த கூடும். இது மட்டுமல்லாது, அடுக்குமாடி கட்டடங்களில் கழிப்பறை அமைக்கும் போது, அதில் நீர்க்கசிவு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

இது போன்ற விஷயங்களில் அனைத்தையும் முறையாக கவனித்து செய்து இருக்கிறோம். எனவே, அடுத்த பல ஆண்டுகளுக்கு கட்டடத்தில் எவ்வித குறைபாடும் ஏற்படாது என்று அமைதியாக இருக்க முடியாது. பெரும்பாலான கட்டடங்களில் பயன்பாட்டு நிலையில் பராமரிப்பு விஷயத்தில் மக்கள் முழுமையாக கவனம் செலுத்துவது இல்லை.

கட்டடங்கள் வாங்கும் நிலையில் ஏற்படும் செலவுக்கு நிகராக, பராமரிப்பிலும் செலவு ஏற்படும் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வாகனங்கள் போன்று கட்டடத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் முழுமையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக, கட்டடத்தில் எந்தெந்த பகுதிகளில் லேசான நிலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது, நீர்க்கசிவு மற்றும் ஓதம் ஏற்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். இது மட்டுமல்லாது, கட்டடத்தில் மேலோட்டமாக தெரியவரும் சிறிய அளவிலான உடைப்புகளை அலட்சியப்படுத்தாமல், அதை முறையாக பணியாளர்கள் வாயிலாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவாக கான்கிரீட் கட்டடங்களில் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் வண்ணப்பூச்சு பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த பணியின் போது பட்டி பார்த்தல் முறையில் சிறிய அளவிலான பாதிப்புகளை சரி செய்யலாம்.

இது போன்ற பராமரிப்பு பணிகளை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரிந்தாலும், இதற்கான கட்டுமான பொருட்கள் வாங்குவதில் செலவு அதிகரிக்கும். புதிய கட்டடத்துக்கு வாங்கும் விலையில் பராமரிப்பு பணிக்கு கட்டுமான பொருட்களை வாங்க முடியாது.

பராமரிப்பு பணிக்கு தேவை, அடிப்படையில் குறைந்த அளவில் கட்டுமான பொருட்களை வாங்கும் போது அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை கவனிக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement