புதிய கட்டடத்தில் பிளம்பிங் வழித்தடங்களை திட்டமிடுவது எப்படி?

பு திதாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர் அதில் ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், எதார்த்த நடைமுறையில் தங்களை அறியாமல் குறிப்பிட்ட சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த தவறிவிடுகின்றனர்.

குறிப்பாக, கட்டடங்களில் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள், மேல் தளம், சுவர்கள், தரை அமைப்பது போன்ற விஷயங்களில் துளியும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைக்கும் மக்கள் வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்துவதில் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.

இந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும், மின்சார இணைப்புக்கான வழித்தடம், பிளம்பிங் இணைப்புக்கான வழித்தடம், கழிவுநீர் வடிகாலுக்கான வழித்தடம் ஆகியவை முறையாக அமைய வேண்டும். இந்த பணிகளை சம்பந்தப்பட்ட பணியாளர்கள் முறையாக மேற்கொள்வார்கள் என்று உரிமையாளர் அலட்சியமாக இருக்கக் கூடாது.

இந்த வழித்தடங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான நபர்களை நியமிக்கும் போது அவர்கள் எப்படி, என்ன வேலை செய்ய போகின்றனர் என்பதை தெளிவாக அறிய வேண்டும். குறிப்பாக, வீட்டில் சீரான தண்ணீர் வினியோகத்துக்கு, பிளம்பிங் இணைப்பு வழித்தடங்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் வீட்டில் மேல்நிலை தொட்டியில் இருந்து ஒவ்வொரு அறைக்கும் தண்ணீர் குழாய் எப்படி கொண்டு செல்லப்படும், எந்தெந்த இடங்களில் வால்வுகள் அமைய வேண்டும் என்பதை தெளிவாக திட்டமிட வேண்டும். இதற்கான வரைபடத்தை தயாரித்து அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

போர்வெல், அல்லது கிணற்றில் இருந்து மேல் நிலை தொட்டிக்கு தண்ணீரை எப்படி கொண்டு செல்வது என்ற விஷயத்தில் தெளிவான திட்டமி டல் தேவை. போர்வெல்லில் இருந்து பெறப்படும் தண்ணீரை நேரடியாக மேல் நிலை தொட்டிக்கு அனுப்புவதா அல்லது, கீழ் நிலை தொட்டியை நிரப்பி அதில் இருந்து மேலே கொண்டு செல்வதா என்பதை தெளிவாக முடிவு செய்யுங்கள்.

நேரடியாக மேல் நிலை தொட்டிக்கு தண்ணீர் செல்வதானால் அதற்கு ஏற்ற மோட்டார்களை பயன்படுத்த வேண்டும். எந்த வகை மோட்டாரை பயன்படுத்தினால், எவ்வளவு நேரத்தில் தொட்டி நிறையும் என்பது உள்ளிட்ட விஷயங்களை மிகவும் துல்லியமாக கணக்கு போட்டு செயல்பட வேண்டும்.

மேல் நிலை தொட்டி யில் இருந்து வீட்டில் எந்தெந்த அறைக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான குழாய்களை முறையாக அமைக்க வேண்டும். இதில் அதிக சிக்கல் இல்லாத வகையில் வழித்தடத்தை திட்டமிட வேண்டும் என்பது மிக முக்கியம்.

குறிப்பாக, மேல் நிலை தொட்டியில் இருந்து அறைகளுக்கு செல்லும் குழாய்களுக்கு மாடியில் தனித்தனி வால்வுகள் அமைப்பது அவசர காலத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்க உதவும். இது போன்ற வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement