நீங்கள் வாங்கும் மனையில் குறுக்கீடுகள் உள்ளதா என்பதை பாருங்கள்!

செ ன்னை போன்ற வளர்ந்த நகரங்களில் வீடு வாங்க முடியாதவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் தற்போது புறநகர் பகுதிகளுக்கு அப்பால் சென்று நிலம் வாங்க ஆசைப்படுகின்றனர். இவ்வாறு நிலம் வாங்குவோரின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பாக விவசாய மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. நகர், ஊரமைப்பு சட்டப்படி முறையான அங்கீகாரம் இருந்தால் மட்டுமே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய மனைகளை விற்பனை செய்ய முடியும் என்ற அளவுக்கு கட்டுப்பாடுகள் வந்துள்ளன.

இது மட்டுமல்லாது, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய மனைப்பிரிவு திட்டங்களை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி பதிவு செய்வதும் தற்போது கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில் அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், மனை வாங்குவோர் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

முறையான அங்கீகாரம் உள்ளது என்பது போன்ற விஷயங்கள் தெளிவாக உள்ளதே என்று மனை வாங்கு வதில் மக்கள் அலட்சியம் காட்ட கூடாது. நீங்கள் புதிதாக காலி மனை வாங்குவதற்காக செல்லும் நிலையில் அதற்கு எத்தகைய மனையை தேர்வு செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

விற்பனைக்கு வரும் மனையின் நான்கு எல்லைகள், நான்கு பக்கங்களும் சீராக உள்ளதா என்றும், அந்த மனையில் நிலத்தின் அமைப்பு சமதளமாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். சில இடங்களில் பெரிய அளவுக்கு புதர்கள் இருந்தால், அதை அப்புறப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று உரிமையாளரிடம் வலியுறுத்த வேண்டும்.

இது மட்டுமல்லாது, நீங்கள் வாங்க நினைக்கும் மனையின் மேல் உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்கிறதா என்பதை கவனியுங்கள். இவ்வாறு உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் பாதை என்றால் எதிர் காலத்தில் அங்கு வீடு கட்ட அனுமதி பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

இத்துடன் அந்த மனையில் நிலத்தடி முறையில் மின்சார கேபிள்கள், தொலை தொடர்பு கேபிள்கள், எரிவாயு நிறுவன குழாய்கள் போன்றவை செல்கிறதா என்பதையும் தெளிவாக விசாரிக்க வேண்டும். இது போன்ற குறுக்கீடுகள் இருந்தால், அத்தகைய மனையை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

இதே போன்று மனையாக இல்லாமல், விவசாய வகைப் பாட்டில் உள்ள காலி நிலங்களை வாங்கும் போதும், அதில் குறுக்கீடுகள் ஏதும் உள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக, கிராமங்களில் வண்டிப்பாதை போன்ற குறுக் கீடுகள் இருக்கும், இதை சரியாக விசாரிக்காமல் நிலத்தை வாங்கினால், அதில் குறிப் பிட்ட அளவுக்கு இழப்பு ஏற்படும்.

மேலோட்டமாக பார்ததால், மனை சீராக இருக்கிறது என்று அவசரகதியில் எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்கள். அதில் என் னென்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்து தெளிவாக யோசித்து முடிவு செய்யுங்கள் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

Advertisement