பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: ராஜ்நாத் சிங் உற்சாக தகவல்

5



புதுடில்லி: ''கடந்த 2024 - 25ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1,50,590 கோடி ஆக அதிகரித்துள்ளது,'' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்து, உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே ஆயுதங்கள், தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக உள்நாட்டிலேயே ஆயுதங்கள், தளவாட தயாரிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

கடந்த 2024 - 25ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.27 லட்சம் கோடியை விட 18% வளர்ச்சி ஆகும். 2019-20ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை ரூ.79,071 கோடியாக இருந்ததிலிருந்து 90% அதிகரிப்பையும் குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இது குறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது: இது பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல் ஆகும். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகிறது. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement