தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: சொல்கிறார் வாசன்

2


தஞ்சாவூர்: தஞ்சாவூரில், நடந்த தமாகா.,வின், டெல்டா மண்டல இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில், கலந்துக்கொண்ட, கட்சியின் தலைவர் வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜ வை, எதிர் கட்சியாக பார்க்காமல், எதிரி கட்சியாக திமுக., பார்க்கிறது. கண்மூடித்தனமாக மத்திய அரசு மீது குறைசொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வலிமையான பாரதத்திற்கு துணை சேர்க்கும் வகையில், வளமான தமிழகம் தேவை. இதற்கு மத்திய அரசுக்கு ஆதரவாக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் தேர்தல் வரும் சில மாதங்களுக்கு முன்பே, தேர்தல் ஜூரம் காரணமாக, ஒரு பொய்யை பல முறை சொன்னால், அது உண்மையாகி விடும் என நினைத்துக்கொண்ட, காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்கள், பொய்யான குற்றச்சாட்டை பரப்புகிறார்கள்.

அதன் அடிப்படையில், தோல்வி பயத்தின் காரணமாக, தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணிகள், லோக்சபாவை நடத்த விடாமல் செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. வரும் பீகார் தேர்தலிலேயே இதற்கு தக்க பாடம் கற்றுக்கொடுப்பார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பது என்பதை விட, தென் மாநிலங்களிலே தமிழகம் தான் சட்டம் ஒழுங்கில் மிக மோசமான மாநிலமாக உள்ளது. அதிமுக., ஆட்சியை ஒப்பிட்டு பார்க்கும் போது, நாள்தோறும் கொலை கொள்ளை திருட்டு, பாலியல் என்பது எங்களை போன்ற எதிர்க்கட்சியினுடைய குற்றச்சாட்டு அல்ல. ஊடகங்களில் முக்கிய செய்தியாக வருகிறது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியாது என்பதை நிரூபித்து விட்டது. அரசினுடைய இயலாமையை மக்கள் புரிந்து கொண்டார்கள். தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

மத்திய அரசினுடைய கல்விக் கொள்கை, மாநில அரசினுடைய கொள்கை கல்வி கொள்கையை பார்த்தால், ஒரு சில மாற்றங்களை தமிழக அரசு ஏற்படுத்தி இருக்கிறது. பெற்றோர் தங்களின் பிள்ளைகள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பல துறைகளில் முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு உண்டான ஒரு பாடத்திட்டம் தான் மத்திய அரசின் பாடத்திட்டம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். கல்வியிலும் அரசியலை புகுந்த வேண்டும், வாக்கு வங்கிக்காக தான் கல்வி துறையும் இருக்கிறது என தி.மு.க.,நினைக்கிறது.

திமுக., அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஏன் வாக்காளர் விஷயத்தில் இவ்வளவு பயம்? உண்மை நிலைக்கு ஏற்றவாறு, நியாயத்தின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. நீங்க நல்லாட்சி செய்தால் உங்களுக்கு ஓட்டு கிடைக்க போகிறது. தோல்வி பயத்தில் பல சந்தேகம் எல்லாம் வருகிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளும் இந்திய அளவில், ஜெயிக்க கூடிய மாநிலங்களில் இந்த பிரச்சனை இருக்காது. தோல்வியை சந்திக்க கூடிய மாநிலங்களில், இந்த பிரச்னை உள்ளது என்பது அதிசயமாக இருக்கிறது.
இவ்வாறு வாசன் பேசினார்.

Advertisement