டிரம்புக்கு எதிராக மோடி அரசை ஆதரிக்க வேண்டும்: சரத்பவார்

8


நாக்பூர்: '' நாட்டு நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக, நெருக்கடி உத்தியை கையில் எடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்'', என முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.


நாக்பூரில் நிருபர்களை சந்தித்த சரத்பவார் கூறியதாவது : இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பது என்பது டிரம்ப்பின் நெருக்கடி உத்தி. நாட்டு நலனை பாதுகாக்க குடிமக்களாகிய நாம், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தற்போதைய நிலையில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து விட்டதா என்பதை யூகிக்க விரும்பவில்லை.


டிரம்ப் முன்பு அதிபராக இருந்த போது அவரின் பணிதிறனை நாம் பார்த்துள்ளோம். அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது என நான் நினைக்கிறேன். அவர் மனதில் பட்டதை எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். இதற்கு நாம் கவனம் கொடுக்கத் தேவையில்லை.


நமது அண்டை நாடுகளை அணுகும் முறையை நாம் புறக்கணிக்கக்கூடாது. இன்று பாகிஸ்தான் நமக்கு எதிராக உள்ளது. நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகள் நம்மால் மகிழ்ச்சியாக இல்லை. அவை நம்மை விட்டு விலகிச் செல்கின்றன. இதனை மோடி புறக்கணிக்காமல், உறவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சந்தேகம் இல்லை



தொடர்ந்து ராகுலின் குற்றச்சாட்டு தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன்பு, இரண்டு பேர் டில்லியில் என்னை சந்தித்தனர். மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி உறுதி என என்னிடம் தெரிவித்தனர். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தேர்தல் கமிஷன் மீது எனக்கு சந்தேகம் இல்லை. இதனால், அவர்களை ராகுலை சந்திக்க வைத்தேன். அவர்கள் என்னிடம் கூறியதை ராகுலிடம் தெரிவித்தனர். ஆனால், இதற்கு நாம் கவனம் செலுத்தக்கூடாது. அது நமது பாதையும் இல்லை என நானும், ராகுலும் முடிவு செய்தோம்.


ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது உள்துறை அமைச்சரின் கடமை. ஆனால், அவர் வேறு விஷயத்தை நோக்கி கவனத்தை திசைதிருப்புகிறார். பீஹார் வாக்காளர் பட்டியல் குறித்து நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். கடந்த 15 நாட்களாக இந்த விவகாரத்தினால் பார்லிமென்டில் அமளி நடக்கிறது. பார்லிமென்ட் மூலம் உண்மையாவ விஷயம் மக்கள் முன்பு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement