20 சதவீத பண்டிகை கால சலுகை பயண திட்டம் : அறிமுகம் செய்கிறது இந்திய ரயில்வே

புதுடில்லி: பண்டிகை காலத்தில் சொந்த ஊர் சென்று வரும் பயணிகள் நலன் கருதி, 20 சதவீத தள்ளுபடியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


நடப்பாண்டு பண்டிகை கால நெரிசலைக் குறைத்து, டிக்கெட் முன்பதிவை எளிதாக்க, ரயில்வே அமைச்சகம் தள்ளுபடி கட்டணங்களை வழங்கும் ஒரு சோதனை சுற்றுப் பயண தொகுப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

பயணிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கும், பயணிகள் தங்கள் பயணத்தில் புறப்படுவது, திரும்புவது என இரண்டையும் ஒன்றாக முன்பதிவு செய்வதை ஊக்குவிப்பதற்கும் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் தங்கள் திரும்பும் பயணத்தை முன்பதிவு செய்யும் பயணிகள், திரும்பும் டிக்கெட்டின் அடிப்படை கட்டணத்தில் 20 சதவீத சலுகையை பெறுவர்.

மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது, தொந்தரவு இல்லாத முன்பதிவை உறுதி செய்வது மற்றும் சிறப்பு ரயில்கள் உட்பட ரயில்களின் சீரான பயன்பாட்டை அடைவது இதன் நோக்கம்.

ஊருக்கு புறப்படும் பயணம் மற்றும் அங்கிருந்து திரும்பும் பயணம் ஆகிய இரண்டிலும் குறிப்பிட்ட பயணி பயணிக்க வேண்டும். இரு டிக்கெட்டுகளிலும் பயணிகள் விவரங்கள் சரியாக பொருந்த வேண்டும்.

இந்தத் திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து ரயில்களுக்கும் (சிறப்பு ரயில்கள் உட்பட) பொருந்தும். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படவில்லை.


ரயில் பயன்பாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், பயணிகளுக்கு பயணத் திட்டமிடலை மேலும் கணிக்கக்கூடியதாக மாற்றுவதே சுற்றுப் பயணத் தொகுப்பின் நோக்கமாகும்.இவ்வாறு ரயில்வே அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement