தேர்தலில் போட்டியிடாத 334 கட்சிகள் பதிவு நீக்கம்; 22 தமிழக 'லெட்டர் பேடு' கட்சிகளும் சிக்கின


புதுடில்லி,:நாடு முழுதும், ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத, 334 கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. அலுவலகம் கூட இல்லாமல், 'லெட்டர் பேடு' கட்சிகளாக செயல்பட்டு வந்த, தமிழகத்தை சேர்ந்த 22 கட்சிகளும் இதில் அடங்கும். அரசியல் கட்சிகள், 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29ஏயின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. பதிவு செய்த கட்சிகள் வரிவிலக்கு போன்ற பல சலுகைகளை பெறுகின்றன.


தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள, 2,800க்கு மேலான கட்சிகளில் பல அங்கீகாரம் பெறாதவை. பதிவு செய்தும் அங்கீகாரம் பெறாத கட்சிகள், ஆறு ஆண்டுகளுக்குள் லோக்சபா, சட்டசபை, இடைத்தேர்தல் என ஏதேனும் ஒரு தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயம்.


ஆனால், 345 கட்சிகள், 2019 முதல் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதை தேர்தல் கமிஷன் கண்டறிந்தது. பதிவு செய்த முகவரியில் அக்கட்சிகள் செயல்படவில்லை என்பதும் தெரிய வந்தது.


அரசியல் களத்தை சுத்தம் செய்யும் விதமாக, அக்கட்சிகளை நீக்கும் நடவடிக்கையை, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் அடங்கிய குழு துவங்கியது.


முதலில், அக்கட்சிகளுக்கு ஜூன் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கட்சிகள் விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்பட்டது.




ஆறு ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் போட்டியிடாதது, ஆண்டு கணக்கு சமர்ப்பிக்காதது, தலைமையக முகவரி, நிர்வாகிகள் விவரங்கள் புதுப்பிக்காதது ஆகியவற்றுக்கு கட்சிகள் கொடுத்த விளக்கம் திருப்தி தராததால், பதிவு செய்தும் அங்கீகாரம் பெறாத 334 கட்சிகளை, தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த கட்சிகளின் பட்டியலையும் வெளியிட்டது.



தமிழகத்தில் அண்ணா-எம்.ஜி.ஆர்----.-ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம், அப்பா-அம்மா மக்கள் கழகம், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி உட்பட 22 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.



'பதிவு செய்து, ஆனால் செயல்படாமல் உள்ள கட்சிகளால் தேர்தல் சீர்திருத்தத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இக்கட்சிகள் பதிவு செய்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன' என தேர்தல் கமிஷன் தெரிவித்தது.



இதையடுத்து, அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,854ல் இருந்து, 2,520 ஆக குறைந்துள்ளது. பதிவு செய்து, அங்கீகாரமும் பெற்றுள்ள பட்டியலில் 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் உள்ளன.

Advertisement