ஆவடி மாநகராட்சியை கண்டித்து 22ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை ": ஆவடி மாநகராட்சியை கண்டித்து, வரும் 22ல் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை சரிவர அள்ளப்படுவதில்லை; பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படவில்லை. கொசு மருந்து முழுமையாக அடிக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் அவதியுற்று வருகின்றனர்.

மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை செய்யாமல், வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடைகளுக்கு குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இதற்கு காரணமான ஆவடி மாநகராட்சியையும், தி.மு.க., அரசையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 22ம் தேதி மாலை 4:00 மணிக்கு, ஆவடி மாநகராட்சி எம்.ஜி.ஆர்., திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இதில், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, அப்துல் ரஹீம், அமைப்புச் செயலர் திருவேற்காடு சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்பர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement