வெற்றியின் அடையாளம் அழகல்ல - தனித்துவமே...


கலிஃபோர்னியாவின் சோனோமா கவுண்டி திருவிழா கடந்த சில நாட்களாக களை கட்டியிருந்தது.
காரணம், உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ள உலகின் அழகற்ற நாய் போட்டி தான்.

“அழகற்ற நாய் போட்டி” என்ற வார்த்தையைப் பார்த்ததும் - இது தவறல்லவா? அந்த அழகற்ற ஜீவன்களை மேடையேற்றி கேலிப்பொருளாக்கும் தன்மையல்லவா? - என்று மேலோட்டமாக நினைக்கத் தோன்றும்.
ஆனால், உண்மையில் இது பாசத்தையும், அன்பையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் போட்டியாகும்.
Latest Tamil News
குறைபாடுகளுடன் பிறந்த நாய்கள், விபத்தில் அடிபட்டு ஊனமுற்ற நாய்கள், நோய்த் தாக்குதல் காரணமாக தோல் மாற்றமடைந்த நாய்கள், வயது முதிர்வு காரணமாக தெருவில் விடப்பட்ட நாய்கள் - இவற்றைப் போல, சமூகம் அங்கீகரிக்காமல் குப்பைத்தொட்டியில் தூக்கி வீசப்படும் நிலைக்கு தள்ளப்படும் நாய்களை, “அதுவும் ஒரு உயிர்தானே, அதன் காலம் முடியும் வரை வாழவேண்டும்தானே” என்று எண்ணிய சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்து வளர்த்துவருகின்றனர்.
Latest Tamil News
அதுவும் பரிதாபத்தால் மட்டும் அல்ல;
எப்படி நம் வீட்டில் ஒரு ஊனமுற்ற குழந்தை பிறந்தால், அதை விசேஷமாக கவனித்து, அலங்கரித்து, கொண்டாடி வளர்ப்போமோ - அதுபோலவே, தத்தெடுத்த நாய்களுக்கு அன்பையும் பாசத்தையும் பொழிந்து, பெற்ற பிள்ளை போலவே வளர்க்கின்றனர்.
Latest Tamil News
மேலும், அதன் பாதிப்புகளில் இருந்து எவ்வளவு மீட்க முடியுமோ, அதையும் கவனமாகச் செய்கின்றனர்.
இதன் விளைவாக, இழந்த பலத்தையும், உற்சாகத்தையும் மீண்டும் பெற்ற நாய்கள், தங்கள் எஜமானரிடம் விசுவாசத்தையும் பாசத்தையும் இன்னும் அதிகமாக வெளிப்படுத்துகின்றன.
Latest Tamil News
இதனை பொதுமக்களுக்கு காட்டவும், கைவிடப்பட்ட நாய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வருடந்தோறும் நடத்தப்படுவது தான் இந்த அழகற்ற நாய் போட்டி.

1970களில், ஐந்து-ஆறு நாய்களுடன் சாதாரணமாகத் தொடங்கிய இந்தப் போட்டி, இன்றைக்கு நூற்றுக்கணக்கான நாய்களும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கலந்து கொள்கின்ற சர்வதேச விழாவாக மாறியுள்ளது.இந்தப் போட்டியை காண, பல நாடுகளில் இருந்தும் பயணிகள் தேதியை குறித்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு, “பெட்டூனியா” என்ற சிறிய வயதான நாய், தனது உரிமையாளரின் அன்பும், தனித்துவமான முகபாவங்களும் காரணமாக முதல் பரிசை பெற்றது. வயதும் உடல் அமைப்பும், போட்டியாளர்களிடையே “பெட்டூனியா” வை வித்தியாசமாக காட்டின, மேடையில் நம்பிக்கையுடன் நடந்து நீதிபதிகளின் மனதை கவர்ந்து பரிசைப் பெற்றாள்.தொடர்ந்து, பல்வேறு நாய்கள் பலவிதமான பரிசுகளைப் பெற்றன. நாய்களை விட, நாய்களின் உரிமையாளர்களே அதிக மகிழ்ச்சி கொண்டனர்.

போட்டியின் முக்கிய அம்சமே - வெற்றிக்கு தேவையானது அழகு அல்ல, தனித்துவமே என்பதுதான்.
அழகின் அளவுகோல் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.
உண்மையான அழகு - அன்பிலும், பாசத்திலும் இருக்கிறது.

இது நாய்களுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் பொருந்தும் அல்லவா?

— எல். முருகராஜ்

.

Advertisement