உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பு கேட்கிறார் ராகுல்

21


புனே: தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சாவர்க்கர் அவமதிப்பு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ல் மார்ச் மாதம் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான ராகுல் பேசுகையில், சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்தார். ராகுலின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சாவர்க்கரின் உறவினர் சத்யாகி என்பவர் வழக்கு தொடுத்தார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.


இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் தரப்பு வக்கீல் மிலிந்த் பவார் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பாஜ தலைவர் ஆர்என் பிட்டு என்பவர் ராகுலை பயங்கரவாதி என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, மற்றொரு பாஜ தலைவர் தர்வீந்தர் மர்வாவும் ராகுலுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார். அவரது பாட்டிக்கு நேர்ந்த கதி, அவருக்கும் நடக்கும் என்று எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய அரசியல் சூழ்நிலைகளால் ராகுலுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ராகுலுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். இது மாநில அரசின் கடமை, என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொடர்பான விசாரணை செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement