திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்

59


சென்னை: முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று (ஆகஸ்ட் 13) திமுகவில் இணைந்தார்.


தமிழக அரசியலில் பாஜ - அதிமுக - பாஜ என பல முறை கட்சி மாறியவர் மைத்ரேயன். இவர், 1990களில் பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில அளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த மைத்ரேயன், 2000ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

2002ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பழனிசாமி - பன்னீர் செல்வம் அணிகள் இடையே மோதல் ஏற்பட்டபோது, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மைத்ரேயன், 2022ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.



இதையடுத்து, மீண்டும் பாஜவில் இணைந்த அவர் அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அதிமுகவில் கடந்தாண்டு இணைந்தார். அவருக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியை இபிஎஸ் வழங்கினார்.


தற்போது அவர் இன்று (ஆகஸ்ட் 13) அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். தேர்தல் நேரத்தில் முக்கியமான தலைவர் அதிமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.




திமுகவில் இணைந்தது ஏன்?





திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுக-பாஜ இடையே கூட்டணியில் தெளிவு இல்லை; பலர் மனக் குழப்பத்தில் உள்ளனர். கட்சியில் என்னைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மாற்றம் ஒன்று தான் மாறாதது. அதனால் அடுத்த இலக்கை நோக்கிச் செல்கிறேன். டில்லியின் கட்டுப்பாட்டில் இபிஎஸ் உள்ளார்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது; 2026ல் திமுக வெற்றி பெறும். 2ம் இடத்திற்குத் தான் இப்போது போட்டி தளபதியின் சிப்பாய்களில் ஒருவராக இணைந்துக் கொள்ள விரும்பி திமுகனில் இணைந்துள்ளேன்.

அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டில்லி இருக்கிறது. டில்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுவர்களாகத்தான் அதிமுக தலைமை இருக்கிறது.

நாளைக்கு ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் கூட, பாஜவின் பங்கு எந்தளவிற்கு இருக்கும். மத்திய அரசின் தலையீடு எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் யோசிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


@block_P@

நீக்கம்

திமுகவில் இணைந்த அடுத்த நொடியே மைத்ரேயனை அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ''அதிமுகவின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடிப்படை உறுப்பினர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மைத்ரேயனை நீக்குவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். block_P

Advertisement