தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

33


சென்னை: சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில், தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த போராட்டத்திற்கு, அ.தி.மு.க., காங்., நா.த.க., கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையே, போராட்டத்தை கைவிட்டு துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.



தனியார் நிறுவன பணியில் பணி பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் இருப்பதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:


* சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

* அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம்.


* சட்டத்திற்கு உட்பட்டு அனைவரையும் அப்புறப்படுத்துங்கள்.


* அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement