லண்டனில் ராபர்ட் கிளைவ் சிலையை அகற்றுணும்; பிரிட்டனில் முன்னாள் எம்பி வலியுறுத்தல்

15


லண்டன்: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்த ராபர்ட் கிளைவின் சிலையை இடித்து அகற்ற வேண்டும் என தொழிலாளர் கட்சியின் முன்னாள் எம்பி டெபோனிர் கோரியுள்ளார்.


பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி, இந்தியாவில் நிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ராபர்ட் கிளைவ். அவர், பல கொடூர செயல்களை செய்து, இந்தியர்களை துன்புறுத்திய சம்பவங்கள், ஆவணங்களில் பதிவாகியுள்ளன.

அத்தகைய கொடூர பின்னணி கொண்ட நபரின் சிலை, லண்டனில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் முன்பாக உள்ளது. 1912ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த சிலையை அகற்ற வேண்டும் என்று, தொழிலாளர் கட்சியின் முன்னாள் எம்.பி.,யும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான பரோனேஸ் டெபோனிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




இந்திய-இலங்கை வம்சாவளியை சேர்ந்த தந்தைக்கும், பிரிட்டனை சேர்ந்த தாய்க்கும் பிறந்த டெபோனிர், பிரிஸ்டல் தொகுதியில் எம்.பி.,யாக இருந்தவர். அவர் கூறியதாவது: இந்தியாவை நாகரிகம் மிக்கதாக பிரிட்டன் மாற்றியதாக இன்னும் பேசிக்கொண்டிருப்பது எந்த வகையிலும் உதவாது. 17ம் நுாற்றாண்டில் இந்தியாவில் இன்ஜினியரிங் தொழில் துறைகள் சிறப்பாக வளர்ந்திருந்தன. கனிமங்களை பிரித்தெடுப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். நம்ப முடியாத பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

இப்போதைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு முன்னதாக, அவர்கள் தடையற்ற வர்த்தகம் செய்தனர். அனைத்தும், காலனி ஆட்சியால் மூடப்பட்டன. அத்தகைய ஆட்சிக்கு அடித்தளம் அமைத்த கிளைவ் சிலையை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்ப்பது போல் அமைத்துள்ளனர். இது, வரலாற்று பூர்வமாக சரியானதல்ல. இந்தியாவுடன் தற்போதைய உறவுகளுக்கு இந்த சிலை எந்த வகையிலும் உதவாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



ராபர்ட் கிளைவின் மார்பிள் சிலை ஒன்று, இன்னும் கோல்கட்டாவில் இருக்கிறது. பிரிட்டனில் ஸ்ரூஸ்பரி நகரில், ராபர்ட் கிளைவின் இன்னொரு சிலையும் இருக்கிறது. அந்த சிலையை அகற்ற வேண்டும் என்றும், அகற்றக்கூடாது என்றும், 2020ல் இரு வேறு தரப்பினர் அரசுக்கு மனு கொடுத்தனர். ஆனால், உள்ளூர் நகராட்சி நிர்வாகம், அந்த சிலையை அப்படியே வைத்திருக்க முடிவு செய்தது.


ஆனால், அதற்கு பக்கத்தில், 'கிழக்கிந்திய கம்பெனி சார்பிலான ராபர்ட் கிளைவின் செயல்பாடுகள், இந்தியாவை கொள்ளையடிப்பதாக இருந்தன. அவரும், கம்பெனியும் இந்தியாவில் பஞ்சம், வறுமையை ஏற்படுத்தினர். குடிமக்களை துன்புறுத்தினர்' என்று தெரிவிக்கும் பலகையை நிறுவி விட்டனர்.

Advertisement