அடிக்கடி கோளாறு; அவசர தரையிறக்கம்: F35 பி போர் விமானம் வாங்குவதில் பல்டி அடிக்கும் நாடுகள்

டோக்கியோ; அவசர தரையிறக்கம், தொடரும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவின் எப் 35 பி போர் விமானங்களை வாங்கும் முடிவில் இருந்து உலக நாடுகள் பின் வாங்கி உள்ளன.
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம், போர் தளவாட உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும் போர் விமானங்கள், அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எப் 35 ரக போர் விமானங்கள், உலகில் 12 நாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அதிலும், எப் 35 பி என்ற வகை போர் விமானம், அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி நாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
இந்த விமானம், ரேடாரில் கண்டறிய முடியாத ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது.
செங்குத்தாக தரை இறங்கும். குறுகிய ஓடுபாதையிலும் டேக் ஆஃப் ஆகும் திறன் கொண்டது. உலகின் மிக விலை உயர்ந்த விமானம் என்பதால் இதில் இருக்கும் தொழில் நுட்பங்களை நிறுவனம் ரகசியமாக பாதுகாக்கிறது.
தொழில்நுட்பம், முதலீடு தந்து உதவிய பிரிட்டன், இத்தாலி நாடுகளுக்கு சலுகை விலையிலும், பிற நாடுகளுக்கு 900 கோடி ரூபாய் முதல் 1100 கோடி ரூபாய் வரையிலான விலையிலும் இந்த விமானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இத்தகைய விலை மதிப்பு கொண்ட இந்த விமானங்கள், சமீப காலமாக அடிக்கடி பழுதாகி வருகின்றன.
பிரிட்டன் கடற்படை பயன்படுத்தி வரும் இந்த வகை விமானம் கடந்த மாதம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர், 25 பிரிட்டன் பொறியாளர் குழு, திருவனந்தபுரத்திற்கு வந்து, விமானத்தில் பழுதை நீக்க, கிட்டத்தட்ட 37 நாட்களுக்குப் பிறகு அந்த விமானம் தாயகம் திரும்பியது.
இதேபோன்று ஒரு சம்பவம் ஜப்பானின் கிரிஷிமா நகரில் உள்ள ககோஷிமா விமான நிலையத்தில் நிகழ்ந்தது. பிரிட்டனைச் சேர்ந்த அதே வகை போர் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதனால் ககோஷிமா விமான நிலைய ஓடுபாதை சிறிதுநேரம் மூடப்பட்டது. இதை ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி செய்து, விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதாக தெரிவித்தது. தற்போது அந்த கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது.
இரு வார கால இடைவெளியில், இந்தியா, ஜப்பான் என இரு நாடுகளில் உலகின் மேம்படுத்தப்பட்ட போர் விமானம் பழுது காரணமாக தரையிறங்கி இருக்கிறது.
2018ம் ஆண்டு முதல் இதுபோல் 12 தொழில்நுட்பக் கோளாறு சம்பவங்கள் இந்த வகை விமானத்துக்கு நிகழ்ந்துள்ளன. தொடக்கத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகள், இந்த விமானத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டின. ஆனால், தொடரும் தொழில்நுட்ப கோளாறு, தரையிறக்கம் போன்ற பிரச்னை காரணமாக அந்நாடுகள் விமானத்தை வாங்குவதில் இருந்து பின்வாங்கி உள்ளன.
பின்வாங்கிய நாடுகள்
எப் 35 பி போர் விமானம் வாங்க மிகவும் ஆர்வமாக இருந்த ஸ்பெயின் இப்போது, 'வேண்டாம்' என்று கூறி விட்டது. போர்ச்சுக்கல், ஸ்விட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகள், 'யோசித்து சொல்கிறோம்' என்று கூறி பின் வாங்கி விட்டன. ஒரு காலத்தில், 'வாங்கலாம்' என்று யோசித்துக் கொண்டிருந்த இந்தியாவும், இப்போது டிரம்ப் வரி விதிப்பு பிரச்னையால் பின்வாங்கும் நிலையில் இருக்கிறது.
இது, அமெரிக்க பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கும், குறிப்பாக லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துக்கும் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.




மேலும்
-
திருச்செந்துார் கோவிலில் இரு தரப்பினர் திடீர் மோதல்
-
துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி
-
'குரூப் - 4' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போட்டி தேர்வர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
தொழிலாளி கொலையில் மச்சானுக்கு ஆயுள் சிறை
-
ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
-
13 ஆண்டுகளாக தேடப்பட்ட போதை கும்பல் தலைவன் கைது