அம்பானி ஆலையை அழிப்போம்! பாக்., ராணுவ தளபதி கொக்கரிப்பு

வாஷிங்டன்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் படத்தை சுட்டிக்காட்டி, ''இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைப்போம்; விலை மதிப்பற்ற வளங்களை குறிவைத்து தாக்குவோம்,'' என, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவி சுற்றுலா பயணியரை கொன்று குவித்தது பாகிஸ்தான். மே 7 முதல் 10 வரை நடந்த, 'ஆப்பரேஷன் சிந்துார்' எனும் அதிரடி போரில், நம் நாடு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தந்தது.

போரில் நிலைகுலைந்த பாகிஸ்தான், 'எங்களை தாக்க வேண்டாம். இத்தோடு நிறுத்திவிடுங்கள்' என கெஞ்சி கதறியது. இதனால், போரை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது.

தற்போது அமெரிக்காவின் நிழலில் தஞ்சமடைந்து, இந்தியாவுக்கு எதிராக மீண்டும் கொக்கரிக்கத் துவங்கியுள்ளது பாகிஸ்தான். போரின்போது பதுங்குக்குழிக்குள் வசித்து வந்த பாக்., ராணுவ தளபதி அசிம் முனிர், டிரம்ப் அழைப்பின்பேரில் தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார்.

புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அசிம் முனிர் பேசுகையில், ''சிந்து நதி, இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல; பாகிஸ்தானுக்கும் சொந்தமானது.

சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டி வருகிறது. அது கட்டி முடிக்கும் வரை காத்திருப்போம். பணிகள் முடிந்ததும், 10 ஏவுகணைகளை வீசி, அணையை தகர்த்து விடுவோம். அணு ஆயுத நாடான பாகிஸ்தானுக்கு எதிராக அச்சுறுத்தல் எழுந்தால், உலகின் பாதி நாடுகளை அழித்துவிடும் வல்லமை இருக்கிறது,'' என கூறியுள்ளார்.

அத்துடன் நிற்காமல், இந்திய பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில், புதிய மிரட்டலையும் விடுத்துள்ளார். குரானில் வரும் சூரா பில் கதையை கூறி தொழிலதிபர் முகேஷ் அம்பானி படத்தை காட்டி, ''இந்தியாவை சும்மா விடமாட்டோம்; தாக்கி அழிப்போம். விலை மதிப்பற்ற வளங்களை குறிவைத்து தாக்குவோம்,'' என, மிரட்டல் விடுத்துள்ளார்.

குஜராத் ஜாம்நகரில், அரபிக்கடலை ஒட்டி, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிகரிப்பு ஆலை உள்ளது.

கடல்வழி மற்றும் வான்வழி தாக்குதல் மூலமாக இந்த இடத்தை எளிதாக தாக்க முடியும் என்று அசிம் முனிர் மறைமுகமாக மிரட்டி உள்ளார். நம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை குறிவைத்து அசிம் முனிர் பேசுவது இது முதல் முறை.

பாகிஸ்தானை பொறுத்தவரை ஆட்சியாளர்களை விட ராணுவத்துக்கு அதிகாரம் அதிகம். அதனால் தான் அமெரிக்க டிரம்ப் நிர்வாகமும், ராணுவ தளபதி அசிம் முனிரை அடிக்கடி அழைத்து, விருந்து கொடுத்து கவுரவித்து வருகிறது.

மத பழமைவாதியான அசிம் முனிர், அமெரிக்க மண்ணில் இருந்து, டிரம்ப் ஆசியுடன் வாய்க்கு வந்தபடி உளறி வருவது, இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement