'துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அரசு இருக்கிறது'

சென்னை: துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு உள்ளது என உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பணி நிரந்தரம் கோரி, 10 நாட்களுக்கும் மேலாக, துாய்மை பணியாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வழக்கறிஞர் வினோத் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று முன்தினம் முறையீடு செய்தார்.

அப்போது, 'மனு தாக்கல் செய்தால், அது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில், நேற்று ஆஜரான வழக்கறிஞர் வினோத், மீண்டும் முறையீடு செய்தார்.

அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''துாய்மை பணியாளர்களுக்கு, அரசு ஆதரவாக இருக்கிறது. ஆனால், துாய்மை பணியாளர்களுக்கு எதிராக, அரசு செயல்படுவதை போன்ற போலி தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.

இதையடுத்து, 'மனுவில் சில குறைபாடுகள் உள்ளதால் அவற்றை நிவர்த்தி செய்து, புதிய மனு தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். தினமும் முறையீடு செய்தால், மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது' என, முறையீடு செய்த வழக்கறிஞரை நீதிபதிகள் எச்சரித்தனர்.

Advertisement