வெள்ளை அறிக்கை வெளியிடாமல் ஸ்டாலின் வெளிநாடு செல்ல கூடாது

தொழில் முதலீடுகளை திரட்டுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் விரைவில் பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த காலங்களில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளில், ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வியடைந்து விட்டன.

இந்நிலையில், மக்களின் வரிப் பணத்தை வீணடித்து, இன்னொரு பயணம் தேவையா என்பதற்கு, அவர் பதிலளிக்க வேண்டும். கடந்த நான்கரை ஆண்டுகளில், மொத்தம் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், அவற்றின் வாயிலாக, 32.78 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட தொழில் திட்டங்களாக மாற்றப்படவில்லை; 5 சதவீதம் அளவுக்குக் கூட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

எனவே, இதுவரை மொத்தம் எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது; முதல்வரின் வெளிநாட்டு பயணங்களால், எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டன; அதனால் எவ்வளவு பேர் வேலை பெற்றுள்ளனர் என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதன்பிறகே, ஸ்டாலின் எந்தவொரு நாட்டுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

- அன்புமணி, பா.ம.க., தலைவர்

Advertisement