உலக பாட்மின்டன்: கடின பிரிவில் லக்சயா சென்

பாரிஸ்: உலக பாட்மின்டனில் இந்தியாவின் லக்சயா சென் கடின பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், வரும் ஆக. 25-31ல் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியானது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென்னுக்கு சவால் காத்திருக்கிறது. முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' சீனாவின் ஷி யூ கியை எதிர்கொள்கிறார். சர்வதேச அரங்கில் சீன வீரருக்கு எதிராக விளையாடிய 4 போட்டியில், ஒன்றில் மட்டும் லக்சயா வெற்றி பெற்றுள்ளார்.


முதல் சுற்றில் பின்லாந்தின் ஜோகிம்மை சந்திக்கும் மற்றொரு இந்திய வீரர் பிரனாய், 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-2' டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்ள நேரிடும். இந்திய வீரருக்கு எதிராக கடைசியாக விளையாடிய 2 போட்டியிலும் ஆண்டர்சன் வெற்றி பெற்றிருப்பதால் பிரனாய்க்கும் சவால் காத்திருக்கிறது.

பெண்கள் ஒற்றையரில் களமிறங்கும் அனுபவ சிந்து, 3வது சுற்று வரை எளிதாக முன்னேறிவிடலாம். ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடிக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இருந்து இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி விலகியது. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடிக்கு 'பை' வழங்கப்பட்டுள்ளது.

Advertisement