அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு

1

சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், 'டெண்டர்' வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.



அது தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர, அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார். அப்போது, சென்னை, கோவை மாநகராட்சியில், 'டெண்டர்' வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வேலுமணி மனு தாக்கல் செய்தார். வேலுமணிக்கு எதிரான வழக்கை மட்டும், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதேபோல், வழக்கை ரத்து செய்ய கோரி, ஆறு நிறுவனங்கள் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது.

இதை பின்பற்றவில்லை எனக்கூறி, முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையில், 'டெண்டர் முறைகேடு தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன' என, லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை பரிசீலித்து, இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை தொடரும்படி, சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு ஏப்.,5ல் உத்தரவிட்டது.

அதையும் நிறைவேற்றவில்லை எனக் கூறி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், 2வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக, வழக்கு தொடர அரசின் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., விமலா விளக்கம் அளிக்க வேண்டும்.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி, இரண்டு வாரங்களுக்குள், விசாரணையை துவக்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து, சிறப்பு நீதிமன்றமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Advertisement