அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

24

சென்னை: சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது. இவரது வீட்டில் காலை 6:45 மணி முதல் 4 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 சிஆர்பிஎப் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதேபோல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ . பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டிலும் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு 10 சிஆர்பிஎப் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tamil News
ஐ.பெரியசாமியின் மகனும், பழநி எம்.எல்.ஏ.வும், திண்டுக்கல் தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள செந்தில்குமார் வீடு, திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் உள்ளது. இவரின் வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு 8 சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


மூன்று பேரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.


அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் தகவல் அறிந்து தி.மு.க., கட்சி தொண்டர்கள் அவரின் வீட்டு முன்பு குவிந்துள்ளனர். அதேபோல் சென்னை, மதுரை, திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் தகவல் அறிந்து தி.மு.க., கட்சி தொண்டர்கள் அவரின் வீட்டு முன்பு குவிந்து உள்ளனர்.



வத்தலக்குண்டு அருகே உள்ள அமைச்சர் பெரியசாமிக்கு சொந்தமான இருளப்பா மில்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்பின்னிங் மில்லில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7:00 மணி முதல் சோதனையிட்டு வருகின்றனர்.


சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertisement