டுப்ளான்டிஸ் மீண்டும் உலக சாதனை: 'போல் வால்ட்' போட்டியில் அசத்தல்

புடாபெஸ்ட்: சுவீடனின் டுப்ளான்டிஸ், 'போல் வால்ட்' போட்டியில் 13வது முறையாக உலக சாதனை படைத்தார்.

ஹங்கேரியில், கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை (2020, 2024) தங்கம் வென்ற சுவீடனின் டுப்ளான்டிஸ் 25, பங்கேற்றார். அதிகபட்சமாக 6.29 மீ., உயரம் தாவி, முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார். கடந்த ஜூன் மாதம் சொந்தமண்ணில் நடந்த போட்டியில் 6.28 மீ., உயரம் தாவி உலக சாதனை படைத்திருந்தார். தவிர இவர், 13வது முறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார்.
டுப்ளான்டிஸ் கூறுகையில், ''ஹங்கேரியில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். சிறப்பான முறையில் 'டிராக்' உருவாக்கப்பட்டிருந்தது. இங்கு மீண்டும் வருவேன், நன்றி,'' என்றார்.


குல்வீர் சாதனை
ஆண்களுக்கான 3000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பங்கேற்றார். பந்தய துாரத்தை 7 நிமிடம், 34.49 வினாடியில் கடந்த 5வது இடம் பிடித்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த போட்டியில் இவர், 7 நிமிடம், 38.26 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். ஏற்கனவே, 5000, 10000 மீ., ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement