நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு



நாமக்கல், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தவிர்த்தல் மற்றும் உடல் நலன் குறித்த பள்ளி மாணவியர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி., தனராசு தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில், 371 போதைப்பொருள் தடுப்பு மன்றங்கள் மற்றும் கல்லுாரிகளில், 138 போதைப்பொருள் தடுப்பு மன்றங்கள், 40 என்.சி.சி., குழுக்கள், 182 என்.எஸ்.எஸ்., குழுக்கள் துவங்கப்பட்டு, தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட காவல் துறை, மதுவிலக்கு காவல் துறை, மாவட்ட மனநல மருத்துவர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர், மாவட்ட தொடர்பு அலுவலர், ரெட் கிராஸ் உள்ளிட்ட அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ்கண்ணன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கற்பகம், அரசு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement