ஆந்திராவில் 72 மணி நேரத்தில் கட்டட அனுமதி: தமிழகத்தில் மட்டும் 60 நாட்கள் இழுத்தடிப்பது ஏன்?

4

அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு, 72 மணி நேரத்தில் ஒப்புதல் வழங்கும் திட்டத்தை ஆந்திர அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் கட்டட அனுமதி பெற, 60 நாட்கள் ஆவதாக கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.

பொது கட்டட விதிகளின் அடிப்படையில், அடுக்குமாடி கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளை 30 நாட்களில் முடிக்க வேண்டும் என, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் ஒற்றை சாளர முறையில் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி திட்டங்களுக்கு குறைந்தபட்சம் 60 நாட்களில் ஒப்புதல் கிடைக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவில் சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. அதை முன்மாதிரியாக வைத்து, தமிழகத்தில் சுயசான்று கட்டட அனுமதி திட்டம், கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.

தற்போது, ஆந்திராவில் அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்களுக்கு, விண்ணப்பித்ததில் இருந்து, 72 மணி நேரத்தில், அதாவது மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டுமான துறையினர் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் இத்திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் எப்போது? இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:

தமிழகத்தில் ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில், கட்டட வரைபட ஆய்வு, ஆவணங்கள் மீதான ஆய்வுகளை, ஓரிரு நாட்களில் முடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பிற துறைகளின் தடையின்மை சான்று பெறுதல், கூடுதல் விபரம் பெறுதல் ஆகியவற்றில் மட்டுமே தாமதம் ஏற்படுகிறது. ஆந்திரா போன்று தமிழகத்திலும் 72 மணி நேரத்தில் அடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கலாம்.

தவறான தகவல், ஆவணங்கள் அளிக்கப்பட்டிருந்தால், ஒப்புதல் ரத்து செய்யப்படும் என்பது போன்ற நிபந்தனைகளுடன், இதை செயல்படுத்தலாம். முதல்கட்டமாக, 10,000 சதுர அடி வரையிலான திட்டங்களில், இதை அமல்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்துக்கு தேவை தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:

சுயசான்று முறை கட்டட அனுமதி போன்று, அடுக்குமாடிகளுக்கு 72 மணி நேரத்தில் ஒப்புதல் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தலாம். தொழில்நுட்ப ரீதியாக இதற்கு தேவையான கட்டமைப்புகள் தயாராக உள்ளன.

அதிகாரிகள் நிலையில் ஏற்படும் தாமதங்களை தவிர்த்தால், தமிழகத்திலும் 72 மணி நேரத்தில் கட்டட அனுமதி வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


@block_B@

சாத்தியமாகும்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான நாட்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். தற்போதைய நிலவரப்படி, 50 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் ஒப்புதல் வழங்கலாம் என அரசு முடிவு எடுத்தால் தான், இந்த நடைமுறை தமிழகத்தில் சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.block_B


- நமது நிருபர் -

Advertisement