சுதந்திர தின விழா கொண்டாட்டம் 85 ஏரிகளில் தேசிய கொடியேற்றம்

மைசூரு: சுதந்திர தினத்தை ஒட்டி, 'நரேகா' திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் சீரமைக்கப்பட்ட 85 ஏரிகளில் மூவர்ண கொடி ஏற்ற, மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது.

மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி யுகேஷ் குமார் நேற்று அளித்த பேட்டி:

'நரேகா எனும் மஹாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின்' கீழ், மாவட்டத்தின் எச்.டி.கோட்டில் 16, ஹூன்சூரில் 16, மைசூரில் 15, நஞ்சன்கூடில் 5, பிரியாபட்டணாவில் 4, சாலிகிராமத்தில் 6, சரகூரில் 8, டி.நரசிபுராவில் 15 என 85 ஏரிகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.

சுதந்திர தினத்தை ஒட்டி, இந்த ஏரிகளில் மூவர்ண கொடிகள் ஏற்றப்படும். கொடிகளை, சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினர் அல்லது 'பத்ம' விருது பெற்றவர்கள் அல்லது உள்ளூர் மூத்த குடிமக்கள் ஏற்றுவர்.

இது தவிர, பெண்களுக்கான கோலப்போட்டி, குடிநீர் அவசியம் / வானிலை மாற்றம் தலைப்பில் கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்படும். பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சுதந்திர போராட்ட வீரர்கள் / பத்ம விருது பெற்றவர்களுடன் சேர்ந்து செடி நடுவது, ஓவிய போட்டி, கதை சொல்லுதல் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement