தொழிலாளி கொலையில் மச்சானுக்கு ஆயுள் சிறை

ஓசூர், கெலமங்கலம் அருகே, கூலித்தொழிலாளியை கொலை செய்த மச்சானுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி, ஓசூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த குந்துமாரனப்பள்ளி அருகே மஞ்சளகிரியை சேர்ந்தவர் லட்சுமிபதி, 26. கூலித்தொழிலாளி. இவரது தங்கை லட்சுமிதேவியை, அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி, 31, என்பவர் திருமணம் செய்திருந்தார். தம்பதிக்குள் அவ்வப்போது குடும்ப பிரச்னை ஏற்படும்.


இந்நிலையில், கணவரிடம் கோபித்து கொண்டு, அண்ணன் லட்சுமிபதி வீட்டிற்கு லட்சுமி தேவி சென்று விட்டார். அவரை அழைத்து செல்ல கடந்த, 2020 மார்ச், 11ம் தேதி மூர்த்தி சென்றார். அப்போது அவருக்கும், லட்சுமிபதிக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மூர்த்தி, கத்தியால் குத்தியதில் லட்சுமிபதி பலியானார். கெலமங்கலம் போலீசார், மூர்த்தியை கைது செய்தனர்.இந்த வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சந்தோஷ், குற்றம்சாட்டப்பட்ட மூர்த்திக்கு ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜராகினார்.

Advertisement