'குரூப் - 4' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போட்டி தேர்வர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை:கடந்த மாதம் நடந்த 'குரூப் - 4' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து நிலை தேர்வர்கள் சங்கம் சார்பில், சென்னை ராஜரத்தினம் விளை யாட்டு மைதானம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

'கடந்த மாதம் 12ல் நடந்த குரூப் - 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி., வெளிப்படை தன்மையுடன் தேர்வுகளை நடத்த வேண்டும்; குரூப் - 1, குரூப் - 2 தேர்வுகளை தமிழில் எழுதினால் மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, போட்டித் தேர்வர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து, சங்கத்தின் தலைவர் கலீல் பாஷா கூறியதாவது:

குரூப் - 4 தேர்வின் பாடத்திட்டம், ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்களை அடிப்படையாக கொண்டது.

ஆனால், கடந்த மாதம் 12ம் தேதி நடந்த குரூப் - 4 தேர்வில், பிஎச்.டி., மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. 27 கேள்விகள், பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன.

எனவே, நடந்து முடிந்த குரூப் - 4 தேர்வை தமிழக அரசு ரத்து செய்து, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும்.

வெளி மாநிலங்களில், குரூப் - 1 தேர்வின் அதிகபட்ச வயது வரம்பு 49 முதல் 51 ஆக உள்ளது. அதை, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனில், மதுரை அல்லது திருச்சியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement