துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி



நாமக்கல், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்த் ரபிதாஸ் மனைவி மம்தா, 27; தம்பதியர், நாமக்கல்லில் உள்ள தனியார் நுாற்பாலையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, இருவரும் பணியை முடித்துவிட்டு, அருகில் உள்ள தங்கும் அறைக்கு சென்றனர். அங்கு துணிகளை துவைத்த மம்தா, அருகில் சென்ற மின்விளக்கு குழாயுடன் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது, மம்தா மீது மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மம்தாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement