வயது மோசடி செய்யும் விளையாட்டு வீரர்களுக்கு 'செக்'

விளையாட்டு வீரர் - வீராங்கனையரின் வயது மோசடிகளுக்கு, மத்திய விளையாட்டு ஆணையம் புதிய நடைமுறைகளின் வாயிலாக, கடிவாளம் போட திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு வீரர் - வீராங்கனையர் சாதிக்கும் ஆர்வத்தில், தங்களின் வயது சார்ந்த ஆவணங்களில் திருத்தம் செய்து, முறைகேடாக போட்டிகளில் பங்கேற்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்துகளை, மத்திய விளையாட்டு ஆணையம் பெற்றது.

அதன் அடிப்படையில், தேசிய விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக, மத்திய விளையாட்டு ஆணையத்தில் பதிவு செய்யும்போது, பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, மெட்ரிக்குலேஷன் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு ஆகிய ஆவணங்களையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் ஏற்பட்டால், வீரர்களின் வயதை துல்லியமாக தீர்மானிக்க, செயற்கை நுண்ணறிவு திறன் அடிப்படையில், எலும்பு மதிப்பீட்டு தேர்வும் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதலை, தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளிடம் பெற்றுள்ளது.

அதாவது, எலும்பு வளர்ச்சி, பல் வளர்ச்சியை, எம்.ஆர்.ஐ., உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளின் வாயிலாக கண்டறிந்து, ஏ.ஐ., தொழில்நுட்ப வசதியுடன் சரிபார்க்கப்படும். அதில், மோசடி நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


புகார் செய்யலாம் இந்த முறையை பின்பற்றுவதாக கூறி, விளையாட்டு வீரர் - வீராங்கனையரை அலைக்கழிப்பது, போட்டிகளில் பங்கேற்கவிடாமல் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டால், 15 நாட்களுக்குள் அதிகாரிகள் மீது புகார் அளிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


- நமது நிருபர் -

Advertisement